ராணுவ வீரர்களை சீண்டினால், அது தமிழகத்துக்கும் நல்லதல்ல, தமிழக அரசுக்கும் நல்லதல்ல என்று முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் பிரபாகரன், பிரபு. இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். விடுமுறையில் ஊருக்கு வந்தனர். இந்த சூழலில், கடந்த 8-ம் தேதி பிரபாகரன் அங்கிருந்த தண்ணீர் தொட்டி முன்பு துணி துவைத்திருக்கிறார். இதை அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி, கண்டித்திருக்கிறார். தி.மு.க.வைச் சேர்ந்த இவர், நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, கவுன்சிலர் சின்னசாமியை பிரபாகரன் தாக்கியதாகக் கூறப்படுகிறது
இதையடுத்து, சின்னசாமி, தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து, பிரபாகரன் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள் இதை தடுக்க வந்த பிரபாகரனின் தம்பி பிரபு மற்றும் அவரது தந்தை உள்ளிட்டோரையும் தாக்கி இருக்கிறார்கள். இதில், படுகாயமடைந்த 3 பேரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதி பிரபு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், சின்னசாமி உட்பட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், இச்சம்பவம் குறித்து ஸ்டாலின் வருத்தமோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.
எனவே, ராணுவ வீரர் கொலையை கண்டித்தும், நாட்டையே காக்கும் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதை கண்டித்தும், முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் பிப்ரவரி 21-ம் தேதி மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் இன்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடந்தது. இப்போராட்டத்தில் பேசிய முன்னாள் ராணுவ வீரர் ஒருவர்தான், ராணுவ வீரர்களை சீண்டுவது தமிழகத்துக்கும் நல்லதல்ல, தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசுக்கும் நல்லதல்ல என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசுக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உலகிலேயே இரண்டாவது பெரிய ராணுவமாக விளங்குவது நமது இந்திய ராணுவம்தான். அதேபோல, உலகத்திலேயே ஒழுக்கமான ராணுவம் நமது இந்திய ராணுவம்தான். நமது ராணுவ வீரர்கள் அனைவரும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள். அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை நீங்கள் சீண்டினால், அது தமிழகத்திற்கும் நல்லதல்ல, தமிழக அரசுக்கும் நல்லதல்ல. நாங்கள் எந்த விஷயத்தை செய்தாலும், ஒழுக்கத்துடனும், உத்வேகத்துடனும் செய்து காட்டுபவர்கள்.
அப்படிப்பட்ட எங்களுக்கு நீங்கள் பரீட்சை வைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது. நான் அனைவருக்கும் அன்புடன் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இங்கு அமர்ந்திருக்கும் ராணுவ வீரர்கள் அனைவரும், குண்டு வைப்பதிலே கெட்டிக்காரர்கள், சுடுவதிலே கெட்டிக்காரர்கள், சண்டையிடுவதிலும் கெட்டிக்காரர்கள்தான். ஆனால், இதையெல்லாம் நாங்கள் செய்வதாக இல்லை. அதேசமயம், இதையெல்லாம் எங்களை செய்ய வைத்து விடாதீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்து பேசியிருக்கிறார்.
இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்துவிட்டு பலரும் ராணுவ வீரரின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.