சீன ராணுவம் அத்துமீறல்: எல்லையில் பதட்டம்!

சீன ராணுவம் அத்துமீறல்: எல்லையில் பதட்டம்!

Share it if you like it

அருணாச்சலப் பிரதேச மாநில எல்லையில் சீன ராணுவம் அத்துமீறியதால், இரு தரப்பு வீரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், எல்லையில் பதட்டம் நிலவி வருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி, கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு எல்லைப் பகுதியில், இந்திய – சீன நாட்டு வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பில் 4 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இதன் பிறகு நடந்த இரு நாட்டு பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லையில் அமைதி நிலவி வருகிறது. அதேசமயம், அருணாச்சலப் பிரதேச மாநில எல்லையில் சீன அத்துமீறி வருவதாகக் கூறப்பட்டு வருகிறது. அம்மாநிலத்தின் எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமித்து குடியிருப்புகளை கட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் செக்டாரில் இந்தியா – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மோதல் கடந்த 9-ம் தேதி நடந்ததாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் சீன ராணுவ துருப்புக்கள் அத்துமீறி நுழைந்ததாகவும், இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது. மேலும், இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்ததாகவும், இதைத் தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் உடனடியாக அங்கிருந்து பின்வாங்கி விட்டதாகவும் இந்திய ராணுவம் கூறியிருக்கிறது. இந்த மோதலுக்குப் பிறகு பரஸ்பரம் அமைதியை நிலைநாட்ட, அப்பகுதியின் தளபதி சீனாவில் உள்ள எல்லை கட்டளை அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரியவந்திருக்கிறது.

அதேசமயம், தவாங்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்களைவிட சீன ராணுவ வீரர்கள் அதிக அளவில் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து மதியம் 12 மணியளவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மதியம் 12 மணியளவில் மக்களவையில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்த அமைச்சர் ராஜ்நாத் சிங், “அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து விட்டது. சீன ராணுவத்துடனான இந்த மோதலில் இந்திய வீரர்கள் சிலர் காயமடைந்தனர்.

இருப்பினும் இந்திய வீரர்கள், சீன ராணுவத்தினருக்கு தக்க பதிலடி தந்து, அவர்களின் முகாமுக்கே திருப்பி அனுப்பி விட்டனர். அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு உடனடியாக சீனாவுடன் இராஜதந்திர வழிகள் மூலம் பேசியது. நமது எல்லைகளை பாதுகாக்க நம்முடைய வீரர்கள் உறுதி எடுத்திருக்கின்றனர். இதற்கு எதிராக வரும் எத்தகைய சவால்களையும் முறியடிக்க நமது படைகள் தயாராக இருப்பதையும் இந்த சபைக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். மேலும், இது தொடர்பாக ராணுவ அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


Share it if you like it