காங்கிரஸ் எம்.எல்.ஏ. முற்றுகை: வைரலாகும் வீடியோ!

காங்கிரஸ் எம்.எல்.ஏ. முற்றுகை: வைரலாகும் வீடியோ!

Share it if you like it

கன்னியாகுமரி மீன் சந்தை கட்டுமானப் பணிகளில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. பிரின்ஸை, அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸார் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சியில் புதிதாக மீன் மார்க்கெட் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்த சூழலில், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு, புதிய மீன் மார்க்கெட் கட்ட 1.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதன் பிறகு, புதிதாக மீன் மார்க்கெட் கட்டப்பட்டு திறப்புவிழாவுக்கு தயாரானது. இந்த மீன் மார்க்கெட்டை அமைச்சர் மனோதங்கராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். இவ்விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், திங்கள்நகர் பேரூராட்சித் தலைவர் சுமன், செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில்தான், மீன் மார்க்கெட் கட்டப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. பிரின்ஸை, அக்கட்சியின் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதாவது, மீன் மார்க்கெட் கட்டியதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியும், பேரூராட்சித் தலைவருமான சுமன் ஊழல் செய்திருப்பதாக, எம்.எல்.ஏ. பிரின்ஸ் உடன் வந்திருந்தவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும், எம்.எல்.ஏ. பிரின்ஸையும், அவரது ஆதரவாளர்களையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.

இதையடுத்து, அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் காங்கிரஸ் கட்சி என்றாலே, கோஷ்டிப் பூசல்தானே. சட்டைக் கிழிப்பு, வேட்டி அவிழ்ப்பு எல்லாம் சர்வ சாதாரணம்தானே என்று கமென்ட் அடித்து வருகின்றனர்.


Share it if you like it