அஸ்ஸாமில் பா.ஜ.க. பெண் நிர்வாகியை பாலியல் பலாத்காரம் செய்து, அடித்துக் கொலை செய்ததாக ஹசனூர் இஸ்லாம் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாடு முழுவதும் ஹிந்து பெண்கள் லவ் ஜிகாத் எனும் காதல் வலையில் வீழ்த்தப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, கட்டாய திருமணம் செய்யும் அவலநிலை தொடர்ந்து வருகிறது. மேலும், காதல் வலையில் வீழ்த்தப்பட்ட இளம்பெண்கள் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்படும் கொடூரங்களும் அரங்கேறி வருகின்றன. டெல்லியில் ஷ்ரத்தா என்கிற ஹிந்து இளம்பெண், தனது முஸ்லீம் காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டை உலுக்கியது.
இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண் நிர்வாகி முஸ்லீம் நண்பரால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோனாலி நாத். கோல்பாரா மாவட்ட பா.ஜ.க. செயலாளராக செயல்பட்டு வந்த இவர், கடந்த 11-ம் தேதி மாலை 4.30 மணியளவில் சொந்த வேலையாக இஸ்லாம்பூர் பகுதிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். இரவு 7 மணியாகியும் வீடு திரும்பாததால், அவரது கணவர் செல்போனில் தொடர்பு கொண்டிருக்கிறார்.
ஆனால், நீண்ட நேரமாக போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர், போலீஸில் புகார் செய்தார். இந்த சூழலில்தான், ஜோனாலி நாத் கழுத்து நெறிக்கப்பட்டும், உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் ஷல்பாரா பகுதிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கவே, நள்ளிரவில் வந்த போலீஸார், ஜோனாலி நாத் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், போலீஸார் நடத்திய விசாரணையில், கோல்பாரா மாவட்டம் மத்தியா பஜார் பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வரும் ஹசனூர் இஸ்லாம் என்பவர், ஜோனாலி நாத்தை கொலை செய்தது தெரியவந்தது. ஜோனாலி நாத் கடந்த 2 ஆண்டுகளாக ஹசனூர் இஸ்லாமுடன் பழகி வந்திருக்கிறார். கடந்த 11-ம் தேதி ஹசனூர் இஸ்லாமை சந்திக்கச் சென்றபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, ஆத்திரமடைந்த ஹசனூர் இஸ்லாம், ஜோனாலி நாத்தை பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்தை நெறித்தும், ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்தது தெரியவந்தது.
அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய பெண் தலைவரான ஜோனாலி நாத் கொலை செய்யப்பட்ட சம்பவம் பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. மாநில பா.ஜ.க. தலைவர் பாபேஷ் கலிதா, ஜோனாலி நாத் மரணத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருக்கிறார். அதேபோல, மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர் அசோக் சிங்கால், “இந்த வழக்கு குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜோனாலி நாத் ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்வதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.