காங்கிரஸ் தலைவர் மீது பெண் நிர்வாகி பரபரப்பு புகார்: ராகுல், பிரியங்கா மீதும் குற்றச்சாட்டு… தலைமை கிடுகிடு!

காங்கிரஸ் தலைவர் மீது பெண் நிர்வாகி பரபரப்பு புகார்: ராகுல், பிரியங்கா மீதும் குற்றச்சாட்டு… தலைமை கிடுகிடு!

Share it if you like it

அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அங்கிதா தத்தா, இளைஞர் அணியின் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாஸ் மீது வன்கொடுமை புகார் சுமத்தி இருக்கிறார். மேலும், இது தொடர்பாக ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

அஸ்ஸாம் மாநில முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்ஜன் தத்தாவின் மகள் அங்கிதா தத்தா. இவர், தற்போது அம்மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். இவர் போட்ட ட்வீட்தான் தற்போது காங்கிரஸ் தலைமையை ஆட்டம் காணச் செய்திருக்கிறது. அதாவது, அங்கிதா தத்தா தனது ட்விட்டர் பதிவில், “காங்கிரஸ் இளைஞர் அணியின் தேசியத் தலைவர்  பி.வி.ஸ்ரீனிவாஸ், செயலாளர் வரதன் யாதாவ் ஆகியோர் என்னை கடந்த 6 மாதங்களாக மோசமான வார்த்தைகள் பேசி தொல்லை கொடுத்து வருகின்றனர். மேலும், பெண் என்பதால் என்னை தரம் தாழ்த்தி பேசுகின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், ‘‘ஸ்ரீனிவாஸ் என்னை தொடர்ந்து துன்புறுத்தினார். பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார். எனது மதிப்புகளும் கல்வியும் இதற்கு என்னை அனுமதிக்கவில்லை. இதை தலைமைக்கு பலமுறை கொண்டு சென்றபோதும், காது கேட்காத மாதிரி விளையாடுகிறது’’ என்று ராகுல் காந்தி, ப்ரியங்கா காந்தி உள்ளிட்டோரை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார். அதேபோல, “நான் 4 தலைமுறை காங்கிரஸ்காரி. 2 முறை உள் அமைப்பில் போட்டியிட்டுள்ளேன். பூத் கமிட்டி அமைத்துள்ளேன், போலீஸிடம் அடி வாங்கியுள்ளேன். எல்.எல்.பி. வரை படித்திருக்கிறேன். கவுகாத்தி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. வரை படித்திருக்கிறேன். கட்சிக்காக நாங்கள் அமைதியாக இருக்கிறோம். ஆனால், ஸ்ரீனிவாஸால் துன்புறுத்தல் நிற்கவில்லை” என்று மற்றொரு ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார்.

இன்னொரு பதிவில், ‘‘ஸ்ரீனிவாஸ் மிகவும் சக்திவாய்ந்தவர் என்று நினைக்கிறார். பெரிய தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் அவர் கட்சியில் உள்ள ஒரு பெண்ணை துன்புறுத்தவும், இழிவுபடுத்தவும் முடியும் என்று நம்புகிறார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நான் பல மாதங்களாக அமைதியாக இருந்தேன். அவருக்கு எதிராக விசாரிக்க இன்னும் யாரும் ஆர்வம் காட்டவில்லை. நான் ஒரு பெண் தலைவர். நான் இத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளானால், மற்ற பெண்களை கட்சியில் சேர நான் எப்படி ஊக்குவிப்பேன். ராகுல் காந்தியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. அவரது பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஜம்முவுக்குச் சென்றேன். பெண்களைப் பற்றி ராகுல் காந்தி பேசும் பாதுகாப்பான இடமா இது? பாலியல் மற்றும் பேரினவாதத்தால் எப்படி ஒரு பெண்ணை இழிவுபடுத்த முடியும்?

‘லட்கி ஹூன் லட்க் சக்தி ஹூன்’ என்ன ஆனது?’’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும், ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின்போது, அவரை சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியதாகவும், ஆனால் இதுவரை எந்த நவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார். அங்கிதா தத்தாவின் இந்த பகிரங்க குற்றச்சாட்டுதான் காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it