முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் – ஒன்று இந்த தேசத்தை காங்கிரஸ் கட்சி ஆளும். இல்லையேல் இந்த தேசத்தை ஆள்பவரை காங்கிரஸ் கட்சி ஆளும் என்ற இறுமாப்பு அரசியலை தகர்த்தெறிந்து காங்கிரஸ் கட்சியும் அல்லாத காங்கிரஸ் கட்சியின் தயவும் இல்லாது ஆட்சி அமைக்க முடியும் . அதை திறம்பட நடத்தி செல்லவும் முடியும் என்ற புதிய அத்தியாயம் தனை இந்திய அரசியல் வரலாற்றில் தீர்க்கமாக எழுதி வைத்த பாரதத்தின் பெருமை மீட்ட வாமணர். வல்லான் வகுத்ததே நீதி என்ற சுதந்திர அரசியல் வரலாறை உடைத்து நல்லோன் வகுப்பதே நீதி என்ற மக்களாட்சி மாண்பை மீட்ட அரசியல் ஆளுமை. ஆர்எஸ்எஸ் வழி வந்த தேசியவாதி. அதிகார கொள்ளை ஒன்றே இலக்காக கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் அகம்பாவத்தை அடித்து நொறுக்கி உதிரிக் கட்சிகளை ஒன்றிணைத்து தேசத்தை வளர்ச்சி பாதையில் முழுமையாக ஐந்தாண்டு காலம் வழி நடத்தி நல்லாட்சி வழங்கியவர். ஆண்டி மடம் என்று ஏளனம் பேசியவர்கள் கண் முன்னே சிறு கட்சிகளை கூட அரவணைத்து கதம்ப மாலையாய் பாரத தேவிக்கு அணிவித்து வல்லரசு இந்திய கனவிற்கு பாதை வகுத்த நல்லாட்சி நாயகன்.பாம்பாட்டி தேசம் என்ற மேற்குலக ஏளனம் உடைத்து அணு ஆயுத சோதனை மூலம் வல்லரசு பாரதம் என்ற பாதை வகுத்த அசகாயன்.
ராஷ்டிரிய சேவா சங்கம் எனும் புஷ்கரத்தில் பிறந்த ஜனசங்கம் என்ற தெள்ளிய நீரோடையாக பயணித்து பின் நாளில் அகிலம் போற்றும் பாரதத்தின் அச்சாணியான பாரதீய ஜனதா கட்சி கண்ட பீஷ்ம பிதாமகன் அடல் பிகாரி வாஜ்பாய். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத காங்கிரஸ் கட்சியின் தயவும் இல்லாது மூன்று முறை பாரதத்தின் பிரதமர் பதவி வகித்த முதல் இந்திய குடிமகன். எந்த அரசியல் பின்னணி யும் இல்லாத பெரும் செல்வாக்கோ இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த வளர்ந்து வந்த சாமானிய மனிதன். கவிஞர் – எழுத்தாளர் – பேச்சாளர் – சிந்தனையாளர் – தொலை நோக்கு திட்ட செயல்பாடு என்ற பன்முக ஆளுமை கொண்டவர்.
நட்சத்திர அந்தஸ்து இல்லாத தேசத்தின் மீது தான் கொண்ட மாறாத பக்தியும் தேசத்தின் வளர்ச்சியில் கொண்ட தீராத காதலையும் மட்டுமே மனதில் கொண்டு கொள்கையை மட்டுமே பற்றிக்கொண்டு இந்திய அரசியலில் பல காட்டாறுகளையும் எரிமலைகளையும் கடந்து வந்த பாரதத்தின் பரம பக்தன். கட்சி பதவி ஆட்சி அதிகாரம் என்றதை எல்லாம் கடந்து பரந்து பட்ட பன்முகம் கொண்ட பாரதத்தின் மாண்பும் மாட்சிமையுமே பெரிது என்று அரசியல் செய்த உத்தமர். தெரிந்ததெல்லாம் தேசியமும் தெய்வீகமும் மட்டுமே . அறிந்ததெல்லாம் தேச நலனுக்கான வழிமுறைகளை மட்டுமே.செய்ததெல்லாம் தேசத்தின் வளர்ச்சிக்கு எது நல்லதோ? அது மட்டும் தான் . செய்ய விரும்பியதெல்லாம் பாரதத்தை தனது பாரம்பரிய கலாச்சார அடையாளத்தை மீட்டு எடுத்து தரணி மெச்சும் தேசமாக உயர்த்தி பிடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கு தான்.
1996 ல் முதன் முறையாக பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் 13 நாட்களில் ஆட்சி இழந்த நிலையில் கூட மக்களையோ எதிர் கட்சிகளையோ குறை கூறாமல் இது ஒரு நல்ல ஆரம்பம் தான் முடிவல்ல என்று தோல்வியிலும் துவளாத தன் நம்பிக்கையின் இலக்கணமாக சம காலத்தில் வாழ்ந்த அவதார புருஷர். காலம் இரண்டாவது முறையாக 1998 ல் ஆட்சி அமைக்க வாய்ப்பை 13 மாதங்களில் சூது தட்டி பறித்த போது கூட அதற்கு காரணமான வர்களை வசைபாடாமல் இந்த 13 மாதங்களில் நாங்கள் விதைத்ததெல்லாம் விருட்சமாகி இந்த தேசத்திற்கு ஒரு நாள் நிச்சயம் நலம் பயக்கும் அந்த நம்பிக்கை யோடு விடை பெறுகிறேன் என்று சொன்ன பொறுமையின் சிகரம் .ஆனால் நான் மீண்டும் வருவேன் என்று சொல்லியபடி திரும்ப வந்து மூன்றாவது முறையாக [ 1999-2004] ஆட்சி அமைத்து முழுவதும் ஐந்து ஆண்டுகளில் பதவி காலம் பூர்த்தி செய்த காங்கிரஸ் அல்லாத கட்சி என்ற பெருமையை தான் சார்ந்த கட்சிக்கு சேர்த்திட்ட செயல் வீரர்.
18 எம் பி களை கையில் வைத்துக் கொண்டு தங்களது ஆட்சியை கவிழ்த்த பெண்ணையும் சரி . ஒண்ட வந்த பேய் ஊர் பேயுடன் சேர்ந்து பேயாட்டம் ஆடிய போதும் சரி துவேஷம் வஞ்சகம் ஏதுமின்றி காலதேவனின் தீர்ப்பு இது . இதை ஏற்கத்தான் வேண்டும் என்று இன்முகம் காட்டி சென்ற மனிதருள் மாணிக்கம். கடைத் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பதை கூட தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அற்பங்களின் நடுவிலே ஒரு சிறுநீரகத்தை தானமாக கொடுத்து விட்டு ஒற்றை சிறுநீரகத்தோடு வாழ்ந்த போதும் அது பற்றி ஒரு வார்த்தை கூட பேசாது வாழ்ந்த மஹான்.
எந்த சிறுபான்மை மக்களுக்கு ஆர்எஸ்எஸ் – பாஜகவினர் எதிரி என்று கட்டமைத்து பிரசாரம் செய்து வந்தார்களோ ? அதே சிறுபான்மை சமூக பெண் குழந்தை உயிர் காக்க ஒற்றை சிறுநீரகத்தை தானமாக தந்திட்டு நல்லோர்க்கு அழகு சொல்வது அல்ல செய்வது என்று வாழ்ந்து காட்டிய மனிதர்.
கட்சிக்கு பின்னடைவு ஆன போதிலும் கொண்ட கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமலும் ஆட்சி போனாலும் சரி. மனசாட்சிக்கும் மனு தருமத்திற்கும் ஒவ்வாத செயலை செய்வதற்கு இல்லை என்று சத்தியத்தின் வழி நின்று வாழ்ந்து வழிகாட்டி சென்ற மண்ணின் மஹா புருஷர்.
கறை படாத கரங்களுக்கும் களங்கமில்லா கொள்கைக்கும் அப்பழுக்கில்லா அரசியலுக்கும் அடையாளமாக வலம் வந்தவர்.
எதிரிக்கு கூட மனசாட்சிக்கு விரோதமாக தீங்கிழழைக்க கூடாது என்று கூறி அதற்காகவே ஆட்சியும் இழந்தவர்.
நன்றி நம்பிக்கை விசுவாசம் என்றதன் அர்த்தம் கூட அறியாத ஆழ்கடல் மணலிலிருந்து ஆகாயத்தின் அலைக்கற்றை வரை கிடைத்த இடத்தில் எல்லாம் வாரி சுருட்டி தேசத்தையும் மக்களையும் சூறையாடிய சுயநலப் பேய்களுக்கு பண்டார பரதேசியாக தெரிந்தது தான் தன் நேர்மைக்கு அவர்களே அளித்த வாக்குமூலம் என்பதை உணர்ந்து மௌனமாக கடந்து போன பிதாமகர்.
பெரும் பான்மை பலம் இல்லாத தங்களை பார்த்து ஆண்டிமடம் என்று எள்ளி நகைத்த இழிபிறவிகளை கூட அடாத செயலை செய்து அயல் நாட்டில் கைதியான போது எதிரி தானே? எப்படி போனால் என்ன ? என்று இல்லாமல் அதையே பயன்படுத்தி அவர்களை அரசியல் அனாதை ஆக்கவும் முயலாமல், பாரதத்தின் மானம் பரதேசத்தில் காற்றில் பறந்து விட கூடும் என்று அஞ்சி காதும் காதும் வைத்ததை போல காரியம் முடித்து பத்திரமாக மீட்டு வந்து ஆண்டி மடம் யார்? அரச வழி யார்? என்பதை செல்வீகமும் – செல்வாக்கும் நிர்ணயிப்பது இல்லை
பாரம்பரியமும் – தனி மனித ஒழுக்கமும் – பண்பாடும் நிர்ணயிப்பது என்று சொல்லாமல் சொல்லி சென்ற யுக புருஷர்.
. பாரதத்தின் வலிமை – தற்காப்பு கருதி செய்யும் அணு ஆயுத சோதனையை காரணம் காட்டி வல்லரசு நாடுகள் எங்கள் மீது பொருளாதார தடை விதிக்குமானால் அது ஒரு அச்சுறுத்தல் அரசியலே. எங்களை தற்காத்து கொள்ள எங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை. தடைகளை பற்றி கவலையும் இல்லை , என்று அணுஆயுத சோதனை செய்து வல்லரசுகளையே ஒதுங்கி போ! என்று சொன்ன பாரத தேவியின் சிங்க மகன்.நவீன பாரதத்தின் அசுர வளர்ச்சி க்கு அச்சாரமாக அன்றே தங்க நாற்கர சாலை என்ற அடிக்கல் நாட்டி போன தீர்க்க தரிசி.
கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்திரா காந்தி மற்றும் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேசத்தின் பக்கம் நின்றவர். இராஜீவ் காந்தி கொலை சதியின் முழு பின்னணி வெளிவர வேண்டும் என்று ஜெயின் கமிஷன் அறிக்கை படி பல்நோக்கு விசாரணை கமிஷன் அமைத்த பண்பாளர். எதிர் கட்சி தலைவராயினும் தன் போல தேசத்தின் சக குடிமகனை முன்னாள் பிரதமரை அண்டை நாட்டவர் வந்து சொந்த மண்ணில் கொலை செய்வது மன்னிக்க முடியாது என்று வாழ்நாள் முழுவதும் இராஜீவ் காந்தி கொலையாளிகளை எதிர்த்தவர்.
கார்கிலில் ஊடுரூவி வந்து பேயாட்டம் ஆடிய விரோதிகளை சொந்த தேசமே கைவிட்ட போதிலும் கூட அவர்கள் நமக்கு எதிரிகள் ஆனாலும் அவர்கள் தேசத்தின் மீது பக்தி கொண்ட நாயகர்கள். அவர்களை உரிய அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு அவர்கள் எதிரி ஆன போதும் எதிரி நாட்டின் தேசிய கொடி போர்த்தி அவர்களை கௌரவமாக வழி அனுப்பி வைத்திட்ட புண்ய பாரதத்தின் தவ புதல்வன்.
அரசு முறை பயணமாக அமெரிக்கா பயணமானபோது காஷ்மீருக்காக பாகிஸ்தான் உங்கள் மீது போர் தொடுக்கலாம். இரண்டு நாடுகளும் அணு ஆயுத நாடுகள். இழப்புகளை தவிர்க்க பாகிஸ்தானோடு பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினையை தீர்த்து கொள்ளுங்கள். நாங்கள் வேண்டுமானால் மத்தியஸ்தம் செய்கிறோம் என்று பெரியண்ணன் அரசியல் செய்த அமெரிக்கா அதிபரிடம் உங்கள் தகவலுக்கு நன்றி. ஆனால் எங்களுக்கு மூன்றாம் நபர் தலையீடு தேவையில்லை தாராளமாக பாகிஸ்தான் போர் கொடுக்கட்டும். அணு ஆயுதம் கூட பிரயோகிக்கட்டும். பரவாயில்லை. பாதி பாரதம் அழிந்ததாக நினைத்து கொள்வேன். ஆனால் அன்றைய பொழுது விடியும் போது உலக வரைபடத்தில் பாகிஸ்தான் என்ற ஒரு நாடு இருக்காது என்று வெள்ளை மாளிகையை அதிரவைத்து தேசிய இறையாண்மையை பாதுகாக்கும் தேசிய அரசியல் என்றால் என்ன ? என்று உலகிற்கு பாடம் சொன்ன சுதந்திர இந்தியாவின் முதல் விஸ்வ குரு.
அவரின் சத்திய வார்த்தை உணர்ந்த பாரதம் அன்று அவருக்கு தராத பெரும்பான்மை பலத்தை இன்று அசுர பலமாக அவரின் சிஷ்யர்களுக்கு வாரி வழங்கி இருக்கிறது . வாஜ்பாய் விட்டு சென்ற கனவுகள் எல்லாம் இன்று நிஜமாகி வருவதை பார்த்து அவரின் ஆன்மா நிச்சயம் குளிரும்.
கொள்கை – நிர்வாகம் – தனிமனித ஒழுக்கம் என்று எதிலும் குறை காண முடியாத இழிமகன்கள் எல்லாம் அவரையும் அவரின் வழி வந்த சிஷ்யர்களையும் மதம் இனம் சாதி வகுப்பு பேத சாயம் பூசி புழுதி இறைக்கலாம். ஆனால் அதை சொல்வோரும் செய்வோரும் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் நமது மண்ணையும் மக்களையும் சூறையாடிய கொள்ளை கூட்டம் தான் என்பதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் பின் இருந்து இயக்குவதும் பால் கொடுக்கும் பசுவின் மடியறுத்து மகிழும் ஈனப் பிறவிகள் தான் என்பதை இந்த தேசம் திட்டவட்டமாக உணர்ந்து தெளிந்து விட்டது .
தன்னைவிட தேசம் பெரிது. தேசம் விட எதுவும் பெரிதில்லை என்று வாழ்ந்தவரை , வாழும் காலத்தில் பொய் புரட்டு கொண்டு வீழ்த்திய வர்கள் இன்று அதற்கான விலையை தரத் தொடங்கி விட்டார்கள். எதிர் கட்சியை வேற்றி கொள்ள முடியாத வன்மத்தில் தேதச்தை எதிரியாக பாவித்தவர்களுக்கு. நாடாளுமன்ற தாக்குதலுக்கு துணை நின்ற தாடகிக்கு கூட கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு தாயின் வேண்டுதலை நிறைவேற்றிய மாமனிதர்.
நன்றி அறியா கூட்டம் இன்று அவரின் வழிவந்தாரையும் அவர் போலே சாத்வீகி என்று எண்ணி தீங்கிழைத்து இன்று அந்த அசகாயர்களிடம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய இராணுவத்தின் கையில் சிக்கிய சீன இராணுவம் போல் சின்னாபின்னமாகி வருகிறார்கள்.
மரண படுக்கையில் இருந்த நிலையில் கூடஎந்த தேசியம் காக்க வாழ்நாளை அர்ப்பணித்தோமோ ? எந்த இறையாண்மையை காக்க அரசியல் தவம் செய்தோமோ ? அந்த தேசிய கொடி தேசிய துக்கம் என்ற பெயரில் சுதந்திர நாளில் அரைக் கம்பத்தில் பறக்க கூடாது அதுவும் தன் காரணமாக இருக்க கூடாது என்று மரணத்தை கூட ஒரு நாள் தள்ளி வைத்து அமரரான காலபுருஷர். அவரின் உடல் தகனம் செய்யப்பட்டு இருக்கலாம் ஆனால் அவரின் ஆன்மா தேசத்தின் ஆளுமையாக எப்போதும் வாழ்ந்திருக்கும். அவரின் மாண்பும் மரியாதையும் மகத்துவமும் என்றைக்கும் பாரத தேசத்தின் ஆன்மாவில் நிறைந்திருக்கும். முன்னோரின் ஆசி வேண்டும் ஆடி அமாவாசை நாளில் அவரின் தேசம் அவரின் ஆசி வேண்டி அவரின்பாதம் பணிகிறது. நாடும் வீடும் வாழ நாடு காக்கும் வீரர்கள் நலம் காண ஆசி வழங்கி மண்ணையும் மக்களையும் எப்போதும் உடனிருந்து வழிநடத்தி பாதுகாத்திடட்டும்.