வேங்கை வயலை தொடர்ந்து கர்ம வீரர் காமராஜர் திறந்து வைத்த அரசு பள்ளியில் நடந்த கொடூரம்

வேங்கை வயலை தொடர்ந்து கர்ம வீரர் காமராஜர் திறந்து வைத்த அரசு பள்ளியில் நடந்த கொடூரம்

Share it if you like it

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீரில் மனிதக் கழிவை கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், வேங்கைவயலை தொடர்ந்து இதுபோன்ற கொடூரம் சேலம் மாவட்டத்தில் தற்போது நடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே காவிரிபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 1958-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் 170 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். ஏழு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் விடுமுறை விடுமுறை தினம் முடிந்து, வழக்கம் போல மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளியில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, பள்ளியின் சமையலறை கூடத்திற்கு சென்று பார்த்தபோது சமையலறை கூடத்தின் சுவற்றில் மனிதக் கழிவுகளை பூசி சமூக விரோதிகள் சிலர் அட்டூழியம் செய்துள்ளனர். மேலும் பள்ளி வளாகத்துக்குள் சமூக விரோதிகள் மது அருந்துவதும் வழக்கமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலறிந்த மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம், கொளத்தூர் வட்டாட்சியர் முருகன், காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பின் தூய்மைப் பணியாளர்கள் மூலம் காலை உணவுத்திட்ட சமையற்கூடம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், இரவு நேர காவலாளி இல்லாததாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து பள்ளிக்கு தேவையான சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனே செய்திட கோட்டாட்சியர் உத்தரவிட்டார். காலை உணவுத்திட்ட சமையற்கூடத்தின் மீது மனித கழிவு பூசிய நபர் குறித்து சுற்றுவட்டார பகுதி மக்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share it if you like it