நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 2 ஆடியோக்களை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, மே 2-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த சூழலில், இன்று காலை திடீரென முதல்வர் ஸ்டாலினை சந்தித்தருக்கிறார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இதனால், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படவிருப்பதாக தகவல்கள் றெக்கை கட்டுகின்றன.
தி.மு.க. ஃபைல்ஸ் என்கிற பெயரில் தி.மு.க. முக்கியப் புள்ளிகளின் சொத்துப் பட்டியலை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட்டார். தொடர்ந்து, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாராஜன் பேசியதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து இரண்டு ஆடியோக்களை வெளியிட்டார். முதல் ஆடியோவில், முதல் ஆடியோவில் ஸ்டாலின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும், மருமகன் சபரீசனும் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளில் 30,000 கோடி ரூபாய் சொத்து குவித்து விட்டதாகக் கூறியிருந்தார்.
இரண்டாவது ஆடியோவில், பா.ஜ.க.விடம் பிடித்த விஷயமே, ஒரு நபர், ஒரு பதவி என்கிற கொள்கைதான். ஆனால், தி.மு.க.வில் எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும்தான் எடுக்கிறார்கள். இங்கு கட்சியே முதல்வரின் மகனும், மருமகனும்தான். தற்போது நான் பதவி விலகினால் எதிர் வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும் என்று கூறியிருந்தார். எனினும், மேற்கண்ட ஆடியோவில் இருக்கும் குரல் தன்னுடையது அல்ல என்று அமைச்சர் பி.டி.ஆர். மறுப்பு தெரிவித்திருந்தாலும், அது அவரது குரல்தான் என்று பலரும் அடித்துச் சொல்கிறார்கள்.
இதையடுத்து, மேற்கண்ட ஆடியோ விவகாரத்தால் பி.டி.ஆர். ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறியதாக தகவல்கள் வெளியானது. அதேசமயம், விளக்கம் மட்டும் கேட்டதாகவும், ராஜினாமா செய்ய வேண்டாம் என்று தெரிவித்ததாகவும் தகவல். இதைத் தொடர்ந்து, கடந்த 25-ம் தேதி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் பி.டிஆர்.பழனிவேல் தியாகராஜன். இதனிடையே, மே மாதம் 2-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்போவதாக ஸ்டாலின் அறிவித்தார். இதனால், பி.டி.ஆரின் பதவி பறிபோகும் வாய்ப்புகள் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பா.ஜ.க. முன்னாள் தேசியத் தலைவர் ஹெச்.ராஜா, அமைச்சர் பி.டி.ஆரின் பதவியை பறிக்கக் கூடாது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில்தான், இன்று காலை திடீரென முதல்வர் ஸ்டாலினை அவரது முகாம் இல்லத்தில் சந்தித்திருக்கிறார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இதனால் அவரது பதவி பறிபோகிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.