ஆஸ்திரேலியாவில் எவ்வித பிரிவினைவாத செயல்கள் மற்றும் நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது. ஹிந்து கோயில்கள் மீதான தாக்குதலை அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானிஸ் கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் சுமார் 7.21 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 43 ஹிந்து கோயில்கள் இருக்கின்றன. சமீபகாலமாக இக்கோயில்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் 4 நாள் பயணமாக கடந்த 8-ம் தேதி இந்தியா வந்தார். டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸிடம், அந்நாட்டிலுள்ள ஹிந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். இந்த சூழலில், இது தொடர்பாக அந்நாட்டு தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு அல்பானிஸ் கூறுகையில், பிரிவினைவாத நடவடிக்கைகளை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஹிந்து கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்படுவதை பொறுக்க முடியாது. இதற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.