ஆஸ்திரேலியாவிலுள்ள ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை கத்தியால் குத்திய தமிழகத்தைச் சேர்ந்த ரஹ்மத்துல்லா என்பவரை சிட்னி போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சையது முகமது. இவரது மகன் முகமது ரஹ்மத்துல்லா, கடந்த 2019-ம் ஆண்டு விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கிறார். பின்னர், அங்குள்ள உணவகத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். இவர், அவ்வப்போது சிறு சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஆஸ்திரேலியாவில் வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்த சூழலில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான சிட்னி நகரில் அமைந்திருக்கும் அபர்ன் ரயில் நிலையத்துக்கு நேற்று மதியம் சென்றிருக்கிறார்.
அப்போது, ரயில் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த துய்மைப் பணியாளர் ஒருவரை ரஹ்மத்துல்லா கத்தியால் குத்தி இருக்கிறார். தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கத்திக்குத்தில் காயமடைந்த தூய்மைப் பணியாளரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், ரஹ்மத்துல்லாவை போலீஸார் பிடிக்க முயன்றிருக்கிறார்கள். அப்போது, போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தி இருக்கிறான் ரஹ்மத்துல்லா.
இதையடுத்து, ரஹ்மத்துல்லாவை நோக்கி போலீஸார் 3 ரவுண்ட் சுட்டிருக்கிறார்கள். இதில், 2 குண்டுகள் பாய்ந்த நிலையில், ரஹமத்துல்லா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே, அவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர் போலீஸார். எனினும், சிகிச்சை பலனின்றி ரஹ்மத்துல்லா உயிரிழந்தார். இதுகுறித்து ஆஸ்திரேலியாவிலுள்ள இந்திய துணை தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், இந்தியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தமிழக போலீஸார் மூலம் அதிராம்பட்டினம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் போலீஸார் ரஹமத்துல்லா வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியில், தாய் ஆமீனாம்மாள், அண்ணன் அப்துல்கனி மற்றும் ஒரு தங்கை இருக்கும் விவரம் தெரியவந்தது. மேலும், அண்ணன் அப்துல் கனி சென்னையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது. ரஹ்மத்துல்லா சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் தெரியவந்ததும், அவரது குடும்பத்தினர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.