சமூக நீதிக்காகவும், ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்துக்காகவும் உழைத்தவர் அய்யா வைகுண்டர் !

சமூக நீதிக்காகவும், ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்துக்காகவும் உழைத்தவர் அய்யா வைகுண்டர் !

Share it if you like it

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20-ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைபதி நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

சாமிதோப்பிலிருந்து ஆன்மீக நெறி :-

அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு லட்சோபலட்சம் பக்தர்கள் சாமிதோப்பு நோக்கிச் செல்லும் அளவுக்கு அய்யா வைகுண்டர் செய்த விஷயம்தான் என்ன ?

சமத்துவம் நிறைந்த சமுதாயத்தை அமைக்கப் பாடுபட்டவர் அய்யா வைகுண்டர். மாசி மாதம் 20-ம் நாள் திருச்செந்தூர் கடலில் இருந்து சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும், ஒரு மூர்த்தியாக வைகுண்ட பரம்பொருளாக அவதரித்து வெளியே வந்தார் என்பது ஜதீகம், அந்த நாளே அய்யா அவதார தினமாக கொண்டாடப்படுகின்றது.

நடந்தது, நடப்பது, நடக்க இருப்பது என முக்காலத்தையும் சொன்ன அய்யா வைகுண்டரின் தலைமைபதி சாமிதோப்பில் ஆன்மீக நெறி பரப்பிக் கொண்டிருக்கிறது. மக்கள் மனதில் குடி கொண்டிருக்கும் கலி என்னும் மாய அரக்கனை அழித்து அவர்களை தர்மயுக வாழ்வுக்கு அழைத்து செல்ல வந்த நாராயணன் எடுத்த அவதாரமே “வைகுண்ட அவதாரம்” என்பது அய்யா வழி பக்தர்களின் நம்பிக்கை.

வைகுண்ட சாமி அவதரித்தார் :-

1809-ல் சாமிதோப்பு கிராமத்தில் பொன்னு மாடன் மற்றும் வெயிலாள் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பெற்றோர் “முடி சூடும் பெருமாள்” என பெயரிட்டனர். இந்த பெயர் வைப்பதற்கே கடும் எதிர்ப்பு கிளம்ப பெற்றோர் “முத்துக்குட்டி” என மாற்றிப் பெயரிட்டனர்.

முத்துக்குட்டிக்கு 22 வயதில் உடல் சுகவீனம் ஏற்பட்டது. நடக்கக்கூட முடியாத முத்துகுட்டியை அவரது தாய் வெயிலாளும், மனைவி திருமால்வடிவும் தொட்டில் கட்டி அதில் படுக்க வைத்து திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழாவுக்குத் தூக்கிச் சென்றனர்.

உணவு அருந்த வழியில் இறக்கிய போது படுத்த படுக்கையாய் இருந்த முத்துக்குட்டி எழுந்து, நடந்து திருச்செந்தூர் கடலுக்குள் சென்றார். அவரது தாய் கடற்கரையிலேயே ஏக்கத்துடன் காத்திருந்தார்.கடலுக்குள் சென்ற முத்துக்குட்டிக்கு திருமால் மூன்று நாள்கள் கலிகாலம் போதித்து வைகுண்டர் என்று நாமகரணம் சூட்டி அனுப்பி வைத்தார்.

கடலில் இருந்து வெளியே வந்த வைகுண்ட சாமி அவரது தாய் வெயிலாளைப் பார்த்து, “அம்மா, நான் இப்போது வைகுண்டராக வந்திருக்கிறேன். நான் இந்த பூவுலகிற்கே சொந்தம்.”என்றார்.

புலியும் பூனையாகும் :

சாதியக் கொடுமைகளுக்கு எதிரான அவரது போதனைகள் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு எரிச்சலூட்டின. பல நாள் பட்டினி போடப்பட்ட புலிக்கு இரையாக கூண்டிற்குள் தூக்கி வீசப்பட்டார். அமைதியே சொரூபமான அய்யா வைகுண்டரின் காலடியில் அகோரப் பசி கொண்ட புலியும், பூனையைப் போல் வந்து சாந்தமாய் படுத்தது.

அய்யா வைகுண்டர் தனது வாழ்நாளின் வெவ்வேறு நிலைகளைக் கடந்த இடங்கள் “பதிகள்” என்று அழைக்கப் படுகின்றன. அந்தப் பதிகளிலும், தினசரி ஐந்து வேளை அன்னதானமும் நடைபெறுகிறது. “பிச்சையெடுத்து மிச்சமில்லாமல் அறப்பணியாற்று”என்பதே அய்யா வைகுண்டரின் வாக்கு.

மேல் நோக்கிய திருநீற்று நாமம் !

அய்யா வழி பக்தர்கள் புருவ மத்தியில் இருந்து நெற்றியில் மேல் நோக்கித் திருநீரால் நாமம் இட்டுக் கொள்வார்கள். இந்தத் திருநீறு பூமிக்கு அடியில் உள்ள தூய்மையான வெள்ளை மண்ணில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அய்யா வழி பக்தர்களின் திருமண நிகழ்வுகளையும் சமூகப் பெரியவர் ஒருவரே தலைவராக நின்று நடத்தி வைக்கிறார்.

சமத்துவம் போற்றும் கிணறு :

சாதிப் பாகுபாடு தலை விரித்து ஆடிய காலகட்டத்தில் சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் சமத்துவ கிணறு ஏற்படுத்தினார். இந்தக் கிணறுக்கு “முத்திரிக் கிணறு” என்று பெயர். அய்யா வழி பக்தர்கள் சாமிதோப்பு தலைமை பதிக்கு செல்வதற்கு முன்பு, இந்த முத்திரிக் கிணற்றில் நீர் இறைத்து நீராடி, அந்தக் கிணற்றுக்கு மரியாதை செலுத்தி விட்டு தான் சாமிதோப்பு பதிக்குள் நுழைவர்.

முத்திரி என்ற சொல்லுக்கு உத்தரவாதம் தருதல், நியமித்தல் என்று பொருள் படுகிறது. சாமிதோப்பு தலைமைப் பதி மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், அனைத்து அய்யா பதிகளிலும் இதே போல் முத்திரிக் கிணறு அமைக்கப்பட்டிருக்கின்றது.

அய்யா வைகுண்டரின் சிந்தாந்தம் “நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றான்” என்பது தான். அதைக் குறிப்பால் உணர்த்துவது தான் இந்த வழிபாட்டு முறை.

அய்யா வைகுண்டரின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அவரது பிறந்தநாளில், ஸ்ரீ அய்யா வைகுண்ட சுவாமிகளை வணங்குகிறேன். ஏழை எளிய மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் கருணை மற்றும் இணக்கமான சமுதாயத்தை உருவாக்க அவர் மேற்கொண்ட எண்ணற்ற முயற்சிகள் குறித்து நாம் அனைவரும் பெருமைப்படுகிறோம். மனித குலத்திற்கான அவரது பார்வையை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்”.

அய்யா வைகுண்டரின் பிறந்தநாளுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :- சமத்துவத்தையும்,தர்மத்தையும் போதித்த அய்யா வைகுண்டர் அவர்களின் 192-வது அவதார நாளில் அய்யா அவர்களை போற்றி வணங்குகிறேன்.

அய்யா வைகுண்டரின் பிறந்தநாளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் “சனாதன வரலாறு” தமிழ் பதிப்பின் புத்தகத்தை வெளியிட்டுள்ளார். மேலும், “விஷ்ணு பகவானின் அவதாரமான அய்யா வைகுண்டரின் 192வது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றவும், சமூகப் பாகுபாடுகளை ஒழிக்கவும் தோன்றியவர் அய்யா வைகுண்டர். ஞானம் மற்றும் ஆன்மிகத்தின் ஊற்றாகவும் சனாதன தர்மத்தின் நியதியாகவும் விளங்கும் அவரது அகிலத்திரட்டு அம்மானை புத்தகம் மனிதகுலத்தை எக்காலத்திற்கும் வழிநடத்தும்.” இவ்வாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.

அய்யா வைகுண்டரின் பிறந்தநாளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை :- சமூக நீதிக்காகவும், ஏழை எளிய மக்கள் முன்னேற்றத்துக்காகவும் உழைத்த அய்யா வைகுண்டர் அவர்களது திரு அவதார தினமான இன்று, அய்யாவின் பக்தர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததற்கு, தமிழக மக்கள் சார்பாகவும் தமிழக பாஜக சார்பாகவும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அய்யா வைகுண்டரின் பிறந்தநாளுக்கு கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் :- இருபத்தி நாலிலொன்று ஏற்பதும் எங்கள் அய்யா வைகுண்டராசர் வந்து ஈரேழு உலகமெல்லாம் ஒருகுடைக்குள் அரசாள வருவதும் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *