சமூகநீதிக்கான இட ஒதுக்கீட்டில் பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சாதனை படைத்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி புகழாரம் சூடி இருக்கிறார்.
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவீதமும் மத்திய அரசு இட ஒதுக்கீடு வழங்கியது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. மருத்துவக் கல்வியில் சேர விருப்பமுள்ள இளைஞர்களுக்கு இந்த முடிவுகள் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம், சமூக நலன் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மத்திய அரசின் எண்ணங்களும், செயல்களும் இருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
மேலும், இந்த ஒதுக்கீடானது நாட்டு மக்களுக்கு சமூகநீதியை வழங்கும் வகையிலான நடவடிக்கையாகும். மத்திய அரசின் இந்த முடிவின் பின்னணியில் 40 ஆண்டு வரலாறு உள்ளது. மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லுாரிகளில் பொதுப்பிரிவு இடங்களை குறைக்காமலேயே இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி. மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு என இரண்டும் பின்பற்றப்படும். இந்த முடிவு மருத்துவ கல்வி வரலாற்றில் உண்மையான திருப்புமுனையாகும். இதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும், ஓ.பி.சி. பிரிவில் மத்திய பட்டியலில் உள்ளவர்களும், அகில இந்திய ஒதுக்கீட்டில் எந்த மாநிலத்தில் இருந்தும் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. தவிர, கடந்த 6 ஆண்டுகளில் 179 புதிய மருத்துவக் கல்லுாரிகள் துவங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், நாட்டிலுள்ள மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்திருக்கிறது. மருத்துவக் கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு சிறப்பாக செயல்படுகிறது. மேலும், மருத்துவம் சார் உற்பத்தித் துறைகளில் இந்திய தயாரிப்புகளை அதிகப்படுத்தி மற்ற நாடுகளுக்கு மத்தியில் பெருமை மிக்கதாக இந்தியா திகழ்கிறது என்று புகழாராம் சூடி இருக்கிறார் பாலகுருசாமி.