தன்னுடைய பிறந்தநாளில் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கும் பஜன் லால் ஷர்மா !

தன்னுடைய பிறந்தநாளில் ராஜஸ்தான் முதல்வராக பதவியேற்கும் பஜன் லால் ஷர்மா !

Share it if you like it

நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. ஆனால், 3 மாநில முதல்வர்கள் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து, 3 மாநில முதல்வர்களையும் தேர்வு செய்வதற்காக, 3 மத்தியப் பார்வையாளர்கள் குழுவை பா.ஜ.க. தலைமை அமைத்தது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோர் இக்குழுக்களுக்கு தலைமை வகித்தனர்.

இதில், மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு சத்தீஸ்கர் மாநிலத்துக்கும், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு மத்தியப் பிரதேச மாநிலத்துக்கும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் தலைமையிலான 3 பேர் அடங்கிய குழு ராஜஸ்தான் மாநிலத்துக்கும் நியமிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முதலில் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா தலைமையிலான குழு சத்தீஸ்கர் மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, முதல்வராக விஷ்ணு தியோ சாயை தேர்வு செய்தது.

அடுத்ததாக, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான குழு மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சென்று, பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி, முதல்வராக மோகன் யாதவைத் தேர்வு செய்தது.

இதன் பிறகு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு, ராஜஸ்தான் மாநிலத்துக்குச் சென்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி, முதல்வராக பஜன் லால் ஷர்மாவை தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர்கள் கடந்த 13-ம் தேதி பதவியேற்றனர். இந்த சூழலில், ராஜஸ்தான் முதல்வராக பஜன் லால் ஷர்மா இன்று பதவியேற்கிறார். முதல்வராக பதவி ஏற்பதற்கு முன் வீட்டில் தனது பெற்றோர்களின் பாதங்களை வணங்கி ஆசீர்வாதம் பெற்றார். இன்று அவரது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it