தமிழக ஊடகங்களின் ஒரு சார்பும் இந்து விரோதமும்

தமிழக ஊடகங்களின் ஒரு சார்பும் இந்து விரோதமும்

Share it if you like it

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் வெகுஜன மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும். ஆட்சியாளர்களின் தவறுகளை எடுத்துரைக்க வேண்டும். மக்களின் குறைகளை ஆட்சியாளர்களின் கவனத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். ஆட்சியாளர்கள் எடுக்கும் முடிவுகளில் சிரமங்கள் இருந்தாலும் அதன் நன்மைகளை எடுத்துச் சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அந்த வகையில் ஆட்சியாளர்கள் அரசு இயந்திரம் மக்கள் என்ற இரண்டு தரப்பின் இணைப்பு பாலமாக சமூக பொறுப்போடும் மக்கள் நலன் தேச நலன் கருதி தகவல் தொடர்பு பணியாற்றும் ஒரு ஜனநாயக அங்கம் தான் ஊடகத்துறை.

இந்த மேம்பட்ட பணிக்காகத்தான் ஊடகத்துறை கட்டமைக்கப்பட்டது. அவர்களின் பணிகளும் தேவையும் தேசத்தின் சேவையின் ஒரு அங்கம் என்பதால்தான் அதை ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அரசியலமைப்பு கௌரவப்படுத்துகிறது. ஆனால் இந்த தேசத்தின் மக்களின் துரதிருஷ்டம் சுதந்திர இந்தியாவின் ஊடகங்கள் எல்லாம் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்பு சுய லாபம் கருதியே செயல்படுகிறது. ஏதேனும் ஒரு சார்பாகவே செயல்பட்டு மக்கள் நலன் தேச நலன் இரண்டையும் புறக்கணிக்கிறது. அதன் உச்சம் தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூட ஊடகங்கள் அத்துமீறியதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம்.

1990 களில் இறுதியில் வாஜ்பாய் அரசின் மீது தெஹல்கா டாட் காம் என்ற ஒரு இணையதளம் சவப்பெட்டி ஊழல் என்று ஒரு அரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியது. இந்திய ஊடகங்கள் அதை மூளை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்தது அதை வைத்து அடுத்து வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த அத்தனை முஸ்திபுகளையும் ஊடகங்கள் எதிர்க்கட்சிகளை விட கடும் பிரயத்தனம் செய்து முயற்சித்தது. அவர்கள் வைத்த குற்றச்சாட்டு 65 லட்சம் ஊழல் நடந்து விட்டது என்று. ஆனால் பின்னாளில் உண்மை வெளிப்படும் போது பாஜகவின் நேர்மையை பேசவோ மக்களிடம் கொண்டு சேர்க்கவோ அந்த ஊடகங்களுக்கு நேரமும் இல்லை. மனமும் இல்லை.

காரணம் அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு எப்படியாவது மீண்டும் காங்கிரஸ் அரியணை அமர வேண்டும் என்பது தான் அது நிகழ்ந்து விட்டது . அதனால் அவர்களுக்கு எந்த உண்மையை பற்றியும் கவலை இல்லை. இன்று வரை ஊடகங்களின் இந்த ஒரு சார்பு போக்கும் இந்து இந்திய விரோதமும் கொஞ்சமும் மாறவில்லை என்பதன் வெளிப்பாடுதான் நூபூர் ஷர்மா விவகாரம் முதல் உதயநிதி விவகாரம் வரை இந்துக்களும் அதன் நம்பிக்கைகளும் அவமதிக்கப்படும்போது மௌனம் காப்பதும் அதற்கு யாரேனும் கண்டனம் பதிலடி தரும் போது அவர்களைப் பார்த்து ஜனநாயகம் கருத்து சுதந்திரம் என்று பாடம் நடத்துவதும் ஊடகங்களில் வழக்கமாக இருக்கிறது.

இன்று உதயநிதி ஒரு சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் என்ற பொறுப்பு வரம்பும் மீறி இந்து மதத்தின் இல்லாத விஷயங்களை பெண் அடிமைத்தனம் பெண்களுக்கு கல்வி மேலாடை மறுக்கப்பட்டது. அவர்களுக்கு சம உரிமை இல்லை .சாதி மத பேதங்கள் என்று என்னென்னவோ இட்டுக்கட்டி எவ்வளவோ பொய் புரட்டுகளை ஒரு பொது மேடைகள் வைத்து பேசியிருக்கிறார். ஒரு மதத்தை ஒழிக்க வேண்டும் என்று ஒரு மாநாடு நடத்தி இருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் ஊடகங்கள் இதைப் பற்றி ஒரு விவாதமும் கண்டனமும் தமிழகத்தில் இருந்து முன்னெடுத்ததாக சிறு செய்தி கூட இல்லை. ஆனால் இன்னும் சில நாட்களில் தற்போது உதயநிதி மீது வலுத்து வரும் கண்டனங்களும் கொடுக்கப்பட்ட புகார்கள் மீது ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அத்தனை ஊடகங்களும் வரிந்து கட்டி உதயநிதிக்கும் திமுகவுக்கும் ஆதரவாக ஜனநாயகம் கருத்து சுதந்திரம் பாசிச பயங்கரவாதம் மோடியின் சர்வாதிகார ஆட்சி என்று மூளை முடுக்கெல்லாம் விவாதங்களை கட்டவிழ்த்து விடுவார்கள். குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இது நிச்சயம் நடக்கும்.

தமிழக ஊடகங்களை தமிழக எல்லைக்கு அப்பால் இருக்கும் அத்தனை ஊடகங்களிலும் உதயநிதியின் பேச்சும் அதற்கு வலுத்துவரும் கண்டனங்களையும் கடந்த காலங்களில் இதே திமுகவினர் பேசிய பேச்சுக்களையும் வைத்து பெரும் விவாதங்களை செய்கிறார்கள். நாடு முழுவதும் இந்த விஷயத்தை சாமானிய மக்கள் வரைக்கும் கொண்டு போய் சேர்க்கிறார்கள். காரணம் அவர்களுக்கு கட்சி அரசியல் வேறுபாடு இருக்கலாம். ஆனால் ஒரு சிலருக்கு சனாதனம் அவர்களின் சொந்த தர்மம். ஒரு சிலருக்கு அவர்கள் மாற்று மதம் சார்ந்தவர் ஆயினும் அது மதிக்கத்தக்க ஒரு தர்மம். அந்த வகையில் அவர்களின் தர்ம கடமையும் அல்லது அவர்கள் ஏற்றுக் கொண்ட ஊடக கடமையும் அவர்களை சரியான முறையில் வழி நடத்தி போகிறது.

ஆனால் தமிழக ஊடகங்களுக்கு தவறு நடந்தாலும் சரி. குற்றம் நடந்தாலும் சரி. பாதிக்கப்பட்டவன் யார் ? என்பதை பற்றி கவலை இல்லை .அங்கு தவறிழைத்தவன் யார் ? குற்றம் இழைத்தவன் யார்? என்பது தான் முதல் கேள்வி .தவறுகளும் குற்றங்களும் காவி அடையாளத்தில் இருக்குமானால் உடனே ஊடகங்கள் களத்தில் இறங்கி கச்சை கட்டும். ஒருவேளை குற்றம் இழைத்தவன் கருப்பு சிவப்பு பச்சை வெள்ளை என்று மாற்று மத அடையாளம் அந்நிய சித்தாந்த அடையாளம் கொண்டவனாக இருந்தானே ஆனால் பாதிக்கப்பட்டவனின் பக்கம் இருக்கும் வலியோ வேதனையோ அவன் நியாயமோ ஊடகங்கள் கண்களுக்கு தெரியாது. அடிபட்டவனின் கதறலும் வேதனையும் ஊடகங்களின் காதுகளிலும் கேட்காது. சொல்லி வைத்தார் போல அனைவரும் கள்ள மவுனம் காப்பீர்கள்.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் அத்துமீறல் என்று 24 மணி நேரம் ஒளிபரப்பு செய்த உங்களுக்கு அந்த அர்ச்சகர் ஒரு மாற்று மதம் சார்ந்தவன் அவன் பெரும் திட்டத்தோடும் பின்னணி சதையோடும் தான் வந்திருந்தால் இதை திட்டமிட்டு தான் நிறைவேற்றி இருந்தான் என்பது காவல்துறை விசாரணையில் வெளிப்பட்டு அது அம்பலமான போது அதை பற்றி ஒரு மூச்சு விடாமல் மற்ற யாரும் பேசவிடாமல் அந்த உண்மை விவரம் காஞ்சிபுரம் கடைவீதியை தாண்டாமல் பார்த்துக் கொண்ட உங்களின் ஒரு சார்பும் பாசமும் இந்து விரோதமும் இன்றும் மாறவில்லை என்பதையே இன்றைய உங்களின் மவுனம் வெளிப்படுத்துகிறது.

ஆனால் இன்று நீங்கள் நியாயங்களை தர்மங்களை பாதிக்கப்பட்டவர்களின் வழிகளை புறக்கணித்து உங்களின் சுயநலங்களை முன்னெடுக்கலாம். உங்களை தட்டிக் கேட்க ஆளில்லாமல் இருக்கலாம். இன்று உங்களுக்கு இது சாதுரியமாக தெரியலாம். ஆனால் இதே போன்ற ஒரு பாதிக்கப்பட்ட நிலை வலியை வேதனையை கடந்து போகும் சூழல் ஒருநாள் உங்களுக்கு வரும் போது உங்களுக்காக குரல் கொடுக்க இங்கு எந்த ஒரு சாமானியமும் இருக்கப் போவதில்லை. இன்று நீங்கள் எப்படி அவர்களின் வலியை வேதனையை கடந்து போகிறீர்களோ அதே போல் அன்று அவர்களும் கடந்து போவார்கள். அவர்களுக்கு அதனால் சுய லாபமோ, சுய விருப்பு வெறுப்போ இருக்கப் போவதில்லை. ஆனால் நீங்கள் எதை விதைத்தீர்களோ? அதை நீங்கள் அறுவடை செய்கிறீர்கள் அந்த வகையில் இது உங்களின் கர்மா எங்களின் கடந்த கால இழப்புகளுக்கும் வேதனைகளுக்கும் இதுவே ஆறுதல் என்று அமைதியாக ஒதுங்கி போவார்கள் . இன்று நீங்கள் காக்கும் கள்ள மவுனம் அன்று உங்களின் தற்கொலை முயற்சியாக உங்களின் கண்முன்னே நிற்கும் ஆனால் எந்த ஒரு நடுநிலையாளனும் சாமானியனும் உங்களின் மனக்குமுறலை கண் கொண்டு பார்க்கப் போவதில்லை. இங்குள்ள எந்த ஒரு தேசியவாதியும் ஆன்மீகவாதியும் உங்களின் பாதிப்புகள் இழப்புகள் பற்றி அக்கறை கொள்ளப் போவதில்லை. அன்று உங்களை உங்களின் தரப்பு நியாயங்களை இந்த சமூகம் ஒட்டுமொத்தமாக புறக்கணித்திருக்கும். இன்றைய தேதியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் இப்படி ஒரு சூழலை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊடகமும் கடந்து போக வேண்டிய காலம் கண்டிப்பாக வரும்.


Share it if you like it