2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களைப் போலவே மோடி தலைமையில்தான் 2024 தேர்தலையும் சந்திப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.
பா.ஜ.க.வின் 7 தேசிய முன்னணி அமைப்புகளின் கூட்டு தேசிய செயற்குழு கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அமித் ஷா பேசுகையில், “2024-ல் நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் இணைந்துதான் போட்டியிடும். அதேபோல, நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடிதான் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக இருப்பார்” என்றார். கடந்த சில மாதங்களாகவே அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக ஊடகங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பல்வேறு தகவல்களை சொல்லி வருகின்றனர். இந்த சூழலில், அடுத்த பிரதமர் வேட்பாளரும் மோடிதான் என்று சொல்லி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அமித்ஷா.
அதேபோல, பீகாரில் ஆளும் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க. இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இதனால், கூட்டணி முறிய வாய்ப்பிருப்பதாக ஊடகங்கள் வதந்திகளை பரப்பி வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எதிர்வரும் பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி தொடரும் என்று கூறியிருக்கிறார். மேலும், இதுகுறித்து பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் செய்தியாளர்களிடம் பேசியபோது, “2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2025 பீகார் சட்டமன்றத் தேர்தல்களில், தற்போதைய கூட்டணிக் கட்சிகள் தொடரும். ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், இனி லாலுவுடன் செல்லமாட்டார். ஏனெனில், நிதீஷ்குமார் பற்றியும், பீகார் அரசியலையும் நான் அறிவேன்” என்று கூறியிருக்கிறார்.