‘மிஷன் 2047 இந்தியா’ சதித் திட்டம் தொடர்பாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி அஸ்கர் அலியை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்திருக்கிறார்கள்.
பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்தவாரம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் இருவர். ஒருவர், முன்னாள் காவல்துறை அதிகாரியான, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஜலாலுதீன். இன்னொருவர் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தில் பணியாற்றி, தற்போது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. இயக்கத்தில் செயல்பட்டு வரும் அத்தர் பர்வேஸ். இருவரும் பீகார் மாநிலத்தில் தற்காப்பு கலைகளை பயிற்றுவிப்பதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இஸ்லாமிய இளைஞர்களை வரவழைத்து ஆயுதப் பயிற்சி அளித்திருக்கிறார்கள். மேலும், ‘இந்தியா விஷன் 2047″ என்கிற திட்டத்தை வகுத்து ‘கோழை ஹிந்துக்களை அடிபணிய வைப்பதே குறிக்கோள்’ என்றும், ‘இந்த இலக்கை எட்டுவதற்கு 10 சதவிகித இஸ்லாமியர்கள் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் இணைய வேண்டும்’ என்றும், மத ரீதியான பல்வேறு கோஷங்களை முன்வைத்து ஹிந்துக்களுக்கு எதிராக இளைஞர்களை தூண்டிவிட்டதாகவும் பீகார் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
மேலும், அத்தர் பர்வேஸ் என்ற நபரின் சகோதரன், பீகாரில் 2001-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியாவான். இதற்கான பல்வேறு ஆதாரங்களையும், ஆவணங்களையும் பீகார் காவல்துறை கைப்பற்றி இருக்கிறது. தவிர, தங்களது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 8 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை அந்த அமைப்பினர் தயார் செய்து வைத்திருந்ததையும் போலீஸார் கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த ஆவணத்தில், துருக்கி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் துணையோடு, இந்தியாவை எதிர்த்து முழுமையான ஆயுதப் போராட்டத்தை நடத்த, படையை தயார்படுத்துவது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்ததோடு, இந்தியாவையும், ஹிந்துக்களையும் அடிபணிய வைக்க இஸ்லாமிய நாடுகள் உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த நிலையில்தான், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிரான புல்வாரி ஷெரீப் வழக்கு தொடர்பாக மோதிஹாரியின் டாக்கா பஜாரில் இருந்து அஸ்கர் அலி என்ற மௌலவியையும், அவருடன் தொடர்புடைய மேலும் இருவரையும் தேசிய புலனாய்வு அமைப்பினர் செவ்வாய்கிழமை கைது செய்திருக்கிறார்கள். பின்னர், மூவரையும் விசாரணைக்காக டாக்கா பஜார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்கு பிறகு மற்ற இருவரும் விடுவிக்கப்பட்ட நிலையில், அஸ்கர் அலி மீது வழக்குப் பதிவு செய்து பாட்னா அழைத்துச் சென்றனர். காரணம், அஸ்கர் அலி தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. 24 வயதாகும் அஸ்கர் அலி, சிஸ்வானிய கிராமத்தைச் சேர்ந்தவர். இவர், டாக்கா பஜாரில் உள்ள ஜாமியா மரியா மிசாவா மதரஸாவில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த மதரஸா 2013-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, அஸ்கர் அலி வீட்டிற்கு தேசிய புலனாய்வு அமைப்பினர் சென்றனர். அங்கு, 5 பைகள் நிறைய உருது புத்தகங்கள் இருந்தன. இவற்றைக் கைப்பற்றிய தேசிய புலனாய்வு அமைப்பினர், இப்புத்தகங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.