‘பிகினி’ பிரியங்காவுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு!

‘பிகினி’ பிரியங்காவுக்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு!

Share it if you like it

பிரியங்கா காந்தியின் பிகினி உடை குறித்த கருத்துக்கு பா.ஜ.க. தரப்பிலிருந்து பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் உடுப்பியிலுள்ள பி.யூ. அரசுக் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத மாணவிகள் 6 பேர், திடீரென கல்லூரிக்கு ஹிஜாப், புர்கா, பர்தா ஆகியவற்றை அணிந்து வந்தனர். இதற்கு, கல்லூரி நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால், அந்த மாணவிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஹிந்து மாணவ, மாணவிகள் காவித்துண்டு அணிந்து வந்தனர். இப்பிரச்னை மாநிலம் முழுவதும் பரவவே, ஹிஜாப் உள்ளிட்டவற்றுக்கு தடை விதித்த மாநில அரசு, பள்ளிக்கு சீருடை மட்டுமே அணிந்து வரவேண்டும் என்று உத்தரவிட்டது. இப்பிரச்னை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்ததால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்ததோடு, 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாக ஒரு சர்ச்சைக் கருத்தை பதிவிட்டிருந்தார். அப்பதிவில், ‘பிகினி, முக்காடு, ஜீன்ஸ், ஹிஜாப் என எதுவாக இருந்தாலும், எதை அணிவது என்பதை முடிவு செய்யும் உரிமை பெண்களுக்கு இருக்கிறது. இது அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமை. ஆகவே, பெண்களை அடக்குமுறைக்கு ஆளாக்காதீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார். பிரியங்கா காந்தியின் இந்த பிகினி பேச்சு பெண்களை முகம் சுளிக்க வைத்தது என்றால் மிகையாகாது.

இந்த நிலையில்தான், பிரியங்காவின் பிகினி பேச்சுக்கு பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பா.ஜ.க. எம்.பி. சுமலதா அம்பரீஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். இதுகுறித்து சி.டி.ரவி கூறுகையில், ‘பள்ளி, கல்லூரிகளில் கண்டிப்பாக சீருடைதான் அணிய வேண்டும். பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லாதபோது பிகினி உடை மட்டுமல்ல, எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளட்டும். பள்ளி, கல்லூரிகளில் அரசியல் செய்ய உரிமை இல்லை’ என்று காட்டமாகக் கூறியிருக்கிறார்.

அதேபோல, கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யான சுமலதா அம்பரீஸ், ‘பெண்கள் எந்த உடை அணிய வேண்டும் என்பது குறித்து முடிவெடுப்பது பெண்களின் உரிமைதான். அந்த வகையில், கடற்கரையிலோ, நீச்சல் குளத்திலோ பிகினி உடையை அணிந்து கொள்ளலாம். ஆனால், பள்ளிகளில் அவ்வாறு அணிய முடியாது. பள்ளிகளில் உடை அணிவதற்கென தனி நெறிமுறை இருக்கிறது. இந்த விவகாரத்தில் மாணவர்களின் வாழ்க்கையுடன் பலரும் விளையாடுகின்றனர்’ என்று பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதேபோல பல்வேறு பா.ஜ.க. தலைவர்களும் பிரியங்காவுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள்.


Share it if you like it