சென்னயில் பிரபலமான யா.முஹைய்யதீன் பிரியாணிக் கடையில் 3 நாட்களுக்கு முன்பு தயார் செய்யப்பட்ட ஊசிப்போன சிக்கன் பிரியாணியை வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பல்லாவரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது யா.முஹைய்யதீன் பிரியாணிக் கடை. இக்கடைக்கு சென்னையின் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. இங்கு வாடிக்கையாளர்கள் க்யூவில் நின்று பிரியாணி வாங்கிச் செல்வதை இன்றளவும் காணலாம். அந்தளவுக்கு கூட்டம் அலைமோதும். இந்த நிலையில்தான், யா.முஹைய்யதீன் பிரியாணிக் கடையில் 3 நாட்களுக்கு முன்பு தயார் செய்யப்பட்ட நாட்டுக்கோழி பிரியாணியை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, யா.முஹைய்யதீன் பிரியாணிக் கடையின் புதிய கிளை ஒன்று சமீபத்தில் விழுப்புரத்தில் திறக்கப்பட்டிருக்கிறது. இங்கு பிப்ரவரி 2-ம் தேதி (நேற்று) வழக்கறிஞர்கள் 2 பேர் சாப்பிட வந்திருக்கிறார்கள். இருவரும் நாட்டுக்கோழி பிரியாணி கேட்க சப்ளையரும் வழங்கி இருக்கிறார். அந்த பிரியாணியை சாப்பிட்டபோது ஊசிப்போன வாடை வந்திருக்கிறது. உடனே, சப்ளையரை அழைத்த வக்கீல்கள், அந்த பிரியாணி ஊசிப் போயிருப்பதாகக் கூறியதோடு, அதை சாப்பிட்டுப் பார்க்கும்படியும் கூறியிருக்கிறார்கள். சப்ளையரும் சாப்பிட்டு பார்த்துவிட்டு, பிரியாணி ஊசிப்போயிருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டதோடு, அந்த பிரியாணி கடந்த 3 நாட்களுக்கு முன்பு செய்யப்பட்டது என்றும் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு போன் செய்த வக்கீல்கள், எப்படி ஊசிப்போன பிரியாணியை வழங்கலாம் என்று கேட்டு கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தகவலறிந்து வந்த போலீஸார், கொரோனாவை காரணம் காட்டி, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். ஆனால், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைசிவரை வரவில்லை என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
இது ஒருபுறம் இருக்க, சென்னையிலுள்ள பிரபல ஹோட்டல்களில் ஆட்டுக்கறிக்கு பதிலாக நாய்க்கறியை கலப்படம் செய்வதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் எழுந்தது நினைவிருக்கலாம். இதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து ரயிலில் கொண்டு வரப்பட்ட 1, 100 கிலோ நாய்க்கறியை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது யா.முஹைய்யதீன் பிரியாணிக் கடையில் 3 நாட்களுக்கு முன்பு சமைக்கப்பட்ட ஊசிப்போன பிரியாணியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். ஆகவே, மக்களே உஷாராக இருக்க வேண்டியது நீங்கள்தான்!