திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் மருத்துவமனையில் வேற்று மதத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்கியதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பா.ஜ.க.வின் ஆந்திர மாநில செய்தித் தொடர்பாளர் பானுபிரகாஷ் ரெட்டி திருப்பதியில் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார் :
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் இந்து சமய அறக்கட்டளை. இந்த அறக்கட்டளைக்கு தொடர்புடைய எந்த துறையிலும் இந்துக்கள் அல்லாத வேற்று மதத்தினருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது சாத்தியமில்லை.
அப்படி இருக்கையில் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் 142 காலியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் 3 பணிகளுக்கு பிசி-இ பிரிவின் கீழ் பணி வழங்கவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிசி-இ பிரிவு என்பது முஸ்லிம் மதத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்ததாகும்.
முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தனது ஆட்சியில் பின் தங்கிய ஏழை முஸ்லிம்களை பிசி-இ பிரிவில் சேர்ப்பதாக அறிவித்தார். ஆனால் இதற்கு முஸ்லிம்களே ஒப்புக்கொள்ளவில்லை. “எங்களில் யாரும் பின் தங்கியவர் இல்லை. அது எங்கள் மதத்திற்கு எதிரானது” என குரல் எழுப்பினர்.
எனவே இந்த விளம்பரத்தை திருப்பதி தேவஸ்தானம் உடனே ரத்து செய்ய வேண்டும் என இவ்வாறு கூறியுள்ளார். .