16% சரிந்த ஸ்டாலின் செல்வாக்கு: 2024 தேர்தலுக்குள் இன்னும் 20% சரியும்… அண்ணாமலை அதிரடி பேட்டி!

16% சரிந்த ஸ்டாலின் செல்வாக்கு: 2024 தேர்தலுக்குள் இன்னும் 20% சரியும்… அண்ணாமலை அதிரடி பேட்டி!

Share it if you like it

இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்வாக்கு 16 சதவிகிதம் சரிந்திருப்பதாகவும், இது 2024 தேர்தலுக்குள் மேலும் 20 சதவிகிதம் சரியும் என்றும் பா.ஜ.க. அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு எதிர்வரும் பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வில் இ.பி.எஸ். தரப்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஓ.பி.எஸ். தரப்பில் செந்தில் முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அதேசமயம், பா.ஜ.க. போட்டியிட்டால் வேட்பாளரை வாபஸ் பெறுவதாகவும் ஓ.பி.எஸ். தெரிவித்திருக்கிறார். இதனால், ஈரோடு கிழக்குத் தொகுதியில் பா.ஜ.க. போட்டியிடுகிறதா என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்திருக்கிறது.

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, “ஈரோடு இடைத்தேர்தல் குறித்து கூட்டணித் தலைவர்களுடன் என்ன பேசினோம் என்பதை சொல்வது நாகரிகம் இல்லை. இது குறித்து கொஞ்சம் பொறுமையாக இருங்கள். சுதந்திர இந்தியாவில் நடந்த இடைத்தேர்தல்களில் இதுவரை ஆளும்கட்சியே பண பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறது. எங்களை பொறுத்தவரை, ஆளுங்கட்சியின் பண பலம், அதிகார பலத்தை எதிர்க்க பலமான வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதுதான். எனவே, எங்கள் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.

மெரினாவில் கருணாநிதியின் பேனா சிலையை வைப்பதால் 13 மீன்பிடி கிராமங்களுக்கு பிரச்னை இருக்கிறது. இதுகுறித்து நேற்று நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தை அரசு நடத்தியதா அல்லது தி.மு.க. நடத்தியதா என்பது தெரியவில்லை. அந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் பெரும்பாலானோர் சிலை வேண்டாம் என்றுதான் பேசி இருக்கிறார்கள். அரசு மக்களின் கருத்தை மதித்து செயல்பட வேண்டும். அதேபோல், கடந்த 6 மாதங்களுக்கு (2022 ஆகஸ்ட்) முன்பு, இந்திய டுடே நடத்திய சர்வேயில், தமிழக முதல்வர் ஸ்டாலின் 60 சதவீத வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். அப்போது, தி.மு.க.வின் இந்தியா டுடேயை பாருங்கள். இந்தியாவிலேயே தமிழக முதல்வர் ஸ்டாலின்தான் நம்பர் 1 என்று பெருமையாகக் கூறினார்கள்.

ஆனால், அதே இந்தியா டுடே 6 மாதங்கள் கழித்து ஜனவரி 26-ம் தேதி நடத்திய சர்வேயில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வெறும் 44 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறார். இதன் மூலம் 6 மாதங்களில் 16 சதவீதம் பின்தங்கி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தியாவில் எந்த அரசியல் முதல்வருக்கும் இமேஜ் சரியவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக அறிவாலயத்தில் இருக்கும் சகோதர சகோதரிகள் இந்தியா டுடே என்ற வார்த்தையை கேட்டாலே அலர்ஜியாகி எல்லா பக்கமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். 2024 தேர்தலுக்கு முன்பு நடத்தப்படும் சர்வேயில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்னும் 20 சதவிகிதம் கீழே சென்று விடுவார். இன்று நான் சொல்கிறேன், எழுதி வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it