மக்கள் பணியில் அசத்தல்: தோல்வியிலும் துவளாத பா.ஜ.க. வேட்பாளர்கள்!

மக்கள் பணியில் அசத்தல்: தோல்வியிலும் துவளாத பா.ஜ.க. வேட்பாளர்கள்!

Share it if you like it

தேர்தலில் தோல்வியடைந்தபோதும், பா.ஜ.க. வேட்பாளர்கள் மக்கள் பணியில் அசத்தி வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. இத்தேர்தலில் சென்னை மாநகராட்சி 121-வது வார்டில் போட்டியிட்டார் ரமேஷ் மணிசங்கர். இவர் தேர்தலில் போட்டியிட்டபோது, மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைத்துத் தருவது உட்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். ஆனாலும், தேர்தலில் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. எனினும் ரமேஷ் துவண்டு விடவில்லை. வழக்கம்போல தான் போட்டியிட்ட வார்டு பகுதிகளுக்குச் சென்று, மக்களை சந்தித்து வருகிறார். அப்படி ஒருமுறை அவர் செல்லும்போது, கணேசபுரம் பகுதியில் ஒரு இடத்தில் மழைநீர் வடிகால் இல்லாமல், சாக்கடை கழிவுநீர் தேங்கி நின்றதோடு, மழைநீரும் வீட்டுக்குள் புகுந்து அப்பகுதி மக்கள் அல்லப்பட்டு வந்தனர்.

இதைக்கண்ட ரமேஷ், இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, நீண்டகாலமாகவே இப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, அதிரடியாக களத்தில் இறங்கிய ரமேஷ், ஆட்களை ஏற்பாடு செய்து அங்கு தேங்கியிருந்த சாக்கடை கழிவுநீரை வெளியேற்றினார். மேலும், சூட்டோடு சூடாக செங்கல், மணல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை வரவழைத்து, பள்ளமாக இருந்த இடத்தை மேடாக்கி சமன்படுத்தியதோடு, சாக்கடை கழிவுநீர் வெளியேற வசதியாக மழைநீர் வடிகால் வசதியும் செய்து கொடுத்தார். இதைத் தொடர்ந்து, ரமேஷ் மணிசங்கரை பாராட்டிய அப்பகுதி மக்கள், அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததோடு, அவரை கவுன்சிலராக தேர்ந்தெடுக்காததற்கு வருத்தமும் தெரிவித்திருக்கிறார்கள்.

இதேபோல, 137-வது வார்டில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டவர் யுவராஜ். இவர் தேர்தலில் போட்டியிட்டபோது, முதியோர்களுக்கு தனது சொந்த செலவில் மாதந்தோறும் மருந்து மாத்திரைகள் வழங்குவது உட்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். ஆனால், இவரும் தேர்தலில் தோல்வியையே தழுவினார். எனினும், இதற்காக தான் கொடுத்த வாக்குறுதியை மீறவில்லை யுவராஜ். தான் சொன்னபடியே, 137-வது வார்டில் பச்சையம்மாள் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் அன்பகம் முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியோருக்கு 1 மாதத்துக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி இருக்கிறார். இதையடுத்து, யுவராஜுக்கு முதியோர் இல்ல நிர்வாகிகளும், அங்கு தங்கி இருக்கும் முதியோரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர். மேலும், வார்டு மக்களும் யுவராஜின் சேவையை பாராட்டி இருக்கிறார்கள்.

கணேசபுரத்தில் மழைநீர் வடிகால் அமைத்துக் கொடுத்த ரமேஷ் மணிசங்கர்…

முதியோர் இல்லத்துக்கு மருந்து மாத்திரைகள் வழங்கும் பா.ஜ.க. வேட்பாளர் யுவராஜ்…


Share it if you like it