கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுப்புத் தெரிவித்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னையில் இன்று பா.ஜ.க.வினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையாம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகானந்தம். இவரது மகள் லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் அமைந்திருக்கும் தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சிறந்த மாணவியாகத் திகழ்ந்த இவரை, கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி பள்ளி ஆசிரியர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதற்கு மாணவி லாவண்யா மறுப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மாணவியின் பெற்றோரை அழைத்து, உங்கள் மகளின் மேற்படிப்பு செலவு உட்பட அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்கிறோம். கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என்று ஆசைவார்த்தை கூறியிருக்கிறார்கள்.
இதற்கு, லாவண்யாவின் பெற்றோரும் மறுப்புத் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவியை கழிவறை, பாத்திரங்களை கழுவ வைத்தல், அறைகளை தூய்மை செய்ய வைத்தல் என்று பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வி.ஹெச்.பி., பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த நிலையில்., மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டும், சி.பி.ஐ. விசாரணை கோரியும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.