கடந்த ஒரு மாதத்தில் மட்டும் காஷ்மீரில் பிரபல தொழில் அதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட 27 ஆயிரம் பேர் பா.ஜ.க வில் இணைந்துள்ளதாக அம்மாநில பா.ஜ.க பொதுசெயலர் அசோக் கவுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: யூனியன் பிரதேசத்தில் பா.ஜ., வளர்ச்சியை நேரிடையாக காண முடிகிறது. அடித்தளம் வலுபெற்று வருகிறது. வரும் தேர்தலில் பிரதமர் மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது. 3வது முறை பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். காஷ்மீரில் எதிர்கட்சிகளின் கூட்டணி பலம் என்பது பா.ஜ.க விடம் தோற்று போகும்.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா, அனந்தனாக் பகுதிகளில் இருந்து இன்றும் பா.ஜ.,வில் பலர் இணைந்தனர். இதில் தொழில் அதிபர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்குவர். கடந்த 1 மாதத்தில் மட்டும் பா.ஜ.,வில் 27 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
காஷ்மீர் மாநிலங்கள் யூனியன் பிரதேசமாக மாற்றம், சிறப்பு அந்தஸ்து ரத்து, உள்ளிட்ட சர்ச்சை முடிவுகள் இருந்தும் பா.ஜ.,வுக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.