சென்னையிலுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீடப்பட்டது ஏன் என்கிற பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது.
மத்தியில் பிரதமர் மோடி தலையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. மோடி மற்றும் பா.ஜ.க. மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக, மேற்குவங்கம், பஞ்சாப், தமிழகம் போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் வெறுப்பு பிரசாரம் தலைதூக்கி இருக்கிறது. இந்த நிலையில்தான், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருக்கும் தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.
அதாவது, சென்னை தியாகராய நகர் பகுதியில் இந்த அலுவலகம் இருக்கிறது. தற்போது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் களைகட்டி இருக்கிறது. இதனால், இக்கட்சி அலுவலகத்துக்கு சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக, கட்சி அலுவலகமான கமலாயம் பிசியாகவே இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், நேற்று நள்ளிரவு (பிப்.9ம் தேதி) கமலாயத்தின் மீது திடீரென பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது.
சில மர்ம நபர்கள், பீர் பாட்டில்களில் பெட்ரோலை நிரப்பி பா.ஜ.க. அலுவலகத்தின் மீது வீசியிருக்கிறார்கள். இந்த பெட்ரோல் குண்டு, கமலாயம் முன்பு விழுந்து வெடித்துச் சிதறி இருக்கிறது. ஆனால், அதிர்ஷ்டவசமாக நள்ளிரவு நேரம் என்பதால் அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்தன. இதனால், யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. ஒருவேளை இச்சம்பவம் பகல் நேரத்தில் நடந்திருந்தால், நிச்சயமாக உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
தகவலறிந்து வந்த போலீஸ் அதிகாரிகள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினார்கள். மேலும், கமலாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் கமலாயம் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு பைக்கில் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரை போலீஸார் கைது செய்து விசாரித்ததில், அவர் நந்தனத்தைச் சேர்ந்த கர்த்தா வினோத் என்பதும், நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்ததால் குண்டு வீசியதாகவும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்திருக்கிறார்.
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிய மாநில அரசு தடை விதித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதற்கு ஆதரவாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினர் நேற்று (பிப்.9-ம் தேதி) கண்டனக் கூட்டம் நடத்தினர். இந்த சூழலில்தான், சென்னையிலுள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருக்கிறது. இதுதான் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி விட்டிருக்கிறது.