பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், தி.மு.க. மீது பகீர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.
தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான சென்னை தி.நகரில் இருக்கும் கமலாலயத்தின் மீது, நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். இது தொடர்பாக, கர்த்தா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், நீட் காரணமாகவே பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ.க. அலுவலகம் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ‘தமிழகத்தில் பா.ஜ.க. அலுவலகம் தாக்கப்படும் போதெல்லாம் தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது. தனி நபர் விருப்பு, வெறுப்புக் கோணத்தில் அல்லாமல், கருத்தியல் ரீதியாக எதிராளியை சகித்துக் கொள்ள முடியாத அரசின் மனப்பான்மை என்பதாகத்தான் நேற்றிரவு நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை பார்க்க முடியும்’ என்று தெரிவித்திருக்கிறார்.