யாருடன் கூட்டணி… டெல்லியில் இருந்து திரும்பிய அண்ணாமலை சஸ்பென்ஸ்!

யாருடன் கூட்டணி… டெல்லியில் இருந்து திரும்பிய அண்ணாமலை சஸ்பென்ஸ்!

Share it if you like it

டெல்லியிலிருந்து திரும்பிய அண்ணாமலை யாருடன் கூட்டணி என்பது குறித்து தெளிவாகக் கூறியிருக்கிறார்.

சமீபகாலமாகவே, அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இதை மறுத்த அண்ணாமலை, கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவெடுக்கும் என்றும், கூட்டணி பற்றி பேச தனக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

இந்த நிலையில், அண்ணாமலை திடீரென நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு, பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து கூட்டணி விவகாரம், உட்கட்சி விவகாரம் குறித்து விவாதித்திருக்கிறார். இதன் பிறகு, இன்று டெல்லியிலிருந்து திரும்பிய அண்ணாமலை, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்துவது குறித்து அமித்ஷாவிடம் பேசினேன். பா.ஜ.க.வுக்கும் எனக்கும் தனிப்பட்ட தலைவர்கள் மற்றும் கட்சி மீது மோதல் இல்லை.

பா.ஜ.க. வேகமாக வளர வேண்டும் என்று நாங்கள் சில முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். கட்சியை வலுப்படுத்த நினைக்கும்போது ஒரு சில மனஸ்தாபங்கள் வருவது வழக்கம்தான். கட்சிக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு பா.ஜ.க. வளர வேண்டும் என்பதே எங்களது நோக்கம். கூட்டணி குறித்து மத்தியக் குழுதான் முடிவு செய்யும். கூட்டணியில் இருந்தாலும் ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சி வளர வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அதுபோலதான் பா.ஜ.க.வும் வளர வேண்டும் என்று நினைக்கிறது” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it