பா.ஜ.க. சூறாவளி பிரசாரம்: கலக்கத்தில் கழகங்கள்!

பா.ஜ.க. சூறாவளி பிரசாரம்: கலக்கத்தில் கழகங்கள்!

Share it if you like it

பா.ஜ.க.வின் சூறாவளி பிரசாரத்தைக் கண்டு திராவிடக் கட்சிகள் கலக்கத்தில் இருக்கின்றன என்பதுதான் ஹைலைட்!

தமிழகத்தில் எதிர்வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் மொத்தமுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் தி.மு.க., வழக்கம்போல தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. அதேசமயம், அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் விலகி தனித்தனியே களம் காண்கின்றன. எனவே, அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், அ.தி.மு.க.வினர் கொங்கு மண்டலத்தை மட்டுமே குறிவைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, பா.ம.க.வினர் வடமாவட்டங்களை மட்டும் குறிவைத்து பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், தி.மு.க.வினரோ பிரசாரத்தில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. காரணம், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருப்பதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் எளிதில் வெற்றிபெற்று விடலாம் என்று மனக்கணக்கு போட்டிருக்கிறார்கள்.

அதேசமயம், பா.ஜ.க.வினரோ ஒட்டுமொத்த தமிழகம் முழுவதுமே சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பா.ஜ.க.வினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். மொத்தமுள்ள 12,838 பதவிகளில் குறைந்தது 1,000 இடங்களிலாவது வெற்றிபெற்று தங்களது பலத்தை காட்ட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். மேலும், தென், மத்திய மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் ஏதாவது ஒரு மாநகராட்சி, 5 நகராட்சி, 10 பேரூராட்சிகளின் தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, மாநில அரசுக்கு நோட் போட்டிருக்கும் உளவுத்துறையும், பிரசாரத்தில் தி.மு.க. சுணக்கம் காட்டினால் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாகி விடும், குறிப்பாக பா.ஜ.க. கணிசமான இடங்களில் வெற்றிபெறும் என்று தெரிவித்திருக்கிறதாம். ஆகவே, பா.ஜ.க.வின் சூறாவளி பிரசாரத்தைக் கண்டு அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் கதிகலங்கிப் போய் இருக்கின்றன.


Share it if you like it