குன்னூர் அருகே கோர விபத்து நிகழ்ந்த ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியது. இதில் பயணம் செய்த 13 பேர் வீரமணம் அடைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து பாரதப் பிரதமர் மோடி, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பல்வேறு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பிபின் ராவத் மறைவிற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர் ராஜன், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழகத்தை சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் தங்களது இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளனர்.
இந்நிலையில் விபத்து எப்படி ஏற்பட்டது? எங்கு தவறு நடந்தது? உண்மையான நிலவரம் என்னவென்பது குறித்து எல்லாம் பதிவு ஆகி இருக்க கூடிய ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பெட்டி தண்ணீரில் விழுந்தாலும், தீயில் எரிந்தாலும், இதில் பதிவு ஆகி இருக்கும் விவரங்கள் முழுமையாக அழிவதில்லை. இதனை ஆய்வுக்கு உட்படுத்தும் பொழுது பல்வேறு மர்மங்கள் விலகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் நிறம் ஆரஞ்சாக இருந்தாலும் இன்று வரை இது கருப்பு பெட்டி என்றே அழைக்கப்பபட்டு வருகிறது.