பாரத பிரதமர் மோடி மக்கள் நாயகனாக செயல்பட்டு வருகிறார் என்று பாலிவுட் நடிகர் அமீர் கான் கூறியிருக்கிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு பாரத பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இதன் பிறகு, ‘மனதின் குரல்’ என்கிற நிகழ்ச்சி மூலம், 2014 அக்டோபர் மாதம் முதல் வானொலி வாயிலாக, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உரை நிகழ்த்தி வருகிறார். இதன் தமிழாக்கமும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் பிரதமர் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில், இந்நிகழ்ச்சியின் 100-வது பகுதி எதிர்வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. இந்த சூழலில், டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை சார்பில் தேசிய மாநாடு நடந்தது. இம்மாநாட்டில் திரைத்துறை, விளையாட்டுத் துறை என இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மாநாட்டை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அமீர்கான், ”மன் கி பாத் நிகழ்ச்சி பொதுமக்களுடன் தகவல் தொடர்பு கொள்வதற்கான முக்கியமான சாதனம். மக்கள் பிரதமர் மோடியை நம்புகிறார்கள். மக்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நிகழ்ச்சியை நடத்துகிறார். ஒரு தலைவர், தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை மக்களிடம் தெரிவித்து, அவர்களின் நம்பிக்கையை பெறுவது மிகவும் முக்கியம். இது எந்த தலைவருக்கும் அடிப்படை தேவை. இந்நிகழ்ச்சி மக்கள் இயக்கமாக நடக்கிறது. மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.
நடிகை ரவீனா டாண்டன் பேசுகையில், “மன் கி பாத் மூலம் ஒவ்வொரு இந்தியரின் மனதையும் பிரதமர் தொட்டு வருகிறார். கண்டுகொள்ளப்படாத நாயகர்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறார். இந்தி திரையுலகில் கட்டுப்பாடுகளை உடைத்து பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்கிறார்கள். சின்னத்திரையிலும், ஓ.டி.டி.யிலும் பெண்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது” என்றார்.