காரல் மார்க்ஸ் சிந்தனைதான் இந்தியாவை சிதைத்தது: 25 ஆண்டுகளில் நம் நாடுதான் ‘டாப்’; கவர்னர் ரவி உறுதி!

காரல் மார்க்ஸ் சிந்தனைதான் இந்தியாவை சிதைத்தது: 25 ஆண்டுகளில் நம் நாடுதான் ‘டாப்’; கவர்னர் ரவி உறுதி!

Share it if you like it

கார்ல் மார்க்ஸின் சிந்தனைதான் இந்தியாவை சிதைத்தது. தற்போது அவரது தத்துவம் புறந்தள்ளப்பட்டு விட்டது. எனவே, அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வளர்ந்த நாடகா இந்தியாதான் இருக்கும் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார்.

சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பேராசியர் தர்மலிங்கம் தமிழில் மொழிபெயர்த்த தீனதயாள் உபாத்யாயாவின் புத்தகங்களின் தமிழாக்க நூல்களான ‘சிந்தனைச் சிதறல்கள்’ மற்றும் ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ ஆகிய புத்தகங்களை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கவர்னர் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய கவர்னர், “சனாதன தர்மம் என்பது விரிவானது. அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைத்தையும் உள்ளடக்கிய ‘தர்மம்’ என்று அழைக்கப்படும் பிரபஞ்ச சட்டத்தால் அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பதாகும். இது சமஸ்கிருதத்தில் மட்டுமல்ல, நமது பண்டைய தமிழ்ப் பாடலான கணியன் பூங்குன்றனாரின் புறநானூறில்கூட ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளில் காணப்படுகிறது.

‘தர்மம்’ என்ற சொல்லை ‘மதம்’ என்பதன் ஆங்கில பொருளாக தவறாகப் புரிந்துகொண்டு, தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் மாபெரும் தவற்றைச் செய்துவிட்டோம். நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பிரபஞ்சத்தின் நித்திய சட்டம், தர்மமாகும். பிரிட்டிஷ் ஆட்சி, பாரதத்தின் சமூகம், கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் அழிவை ஏற்படுத்தியது. நமது தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துவது இறையியல், டார்வீனிய கோட்பாடு, காரல் மார்க்ஸ் கோட்பாடு, ரூசோவின் சமூக ஒப்பந்தக் கோட்பாடு ஆகிய 4 முக்கிய மேற்கத்திய சித்தாந்தங்கள்தான். இதனால்தான், கடந்த 7 தலைமுறைகளை கடந்து வறுமை, பசி, ஆரோக்கியமின்மை, கல்வியின்மை நிலை ஆகியவற்றை ஒழிக்க முடியாமல் இருக்கிறோம். கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என்றே கட்டுரையை எழுதி இருக்கிறார். கார்ல் மார்க்ஸின் சிந்தனைதான் இந்தியாவை சிதைத்தது. தற்போது அவரது தத்துவம் புறந்தள்ளப்பட்டிருக்கிறது.

நம் நாட்டில் பல படித்தவர்கள், எதற்கெடுத்தாலும் மேற்கத்திய சிந்தனைவாதிகள், தத்துவவாதிகள் போன்றோரை மேற்கோள்காட்டியே பேசுகிறார்கள். காரணம், மேற்கோள்காட்ட இந்த நாட்டிலிருந்து ஒருவர்கூட இல்லை எனக் கருதுகிறார்கள். மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்துவது என்ற ஜனநாயகம் பற்றி பேசும்போது, ஆபிரகாம் லிங்கனை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால், அதே நபர்தான் பெண்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. அதை மறந்துவிடுகிறார்கள். ஆனால், அடிமை முறையை ஒழித்ததற்காக லிங்கனை புகழ்கிறார்கள். இதெல்லாம் பதிவுசெய்யப்பட்ட வரலாறு. இது நம் மனதில் ஆழமாக வேரூன்றிய காலனித்துவ சிந்தனையேயன்றி வேறில்லை.

ஆகவே, காலணி ஆதிக்க மனநிலையை முதலில் புறந்தள்ளுங்கள். இன்னும் 25 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும். இந்தியாவின் பிரச்னைகளை தனிப்பட்ட பிரச்னையாக பார்க்கக் கூடாது, இதனை ஒருங்கிணைந்து நாம் எதிர்கொள்ள வேண்டும். பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் உலக நாடுகளுக்கு திண்டாடி வருகின்றனர். ஆனால், இந்தியாவிடம் தீர்வு இருக்கிறது. மொழி, இனம் ஆகியவற்றை வைத்து மக்களை பிரிக்க முடியாது. மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கிறார்ள். உலகின் பாதி நாடுகள் இந்தியாவிலிருந்து செல்பவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை பின்பற்றுகின்றன. இது இந்தியாவின் வளர்சியையும் வலிமையையும் எடுத்துரைக்கிறது” என்றார்.


Share it if you like it