வேறு மாநில அரசு அதிகாரிகளைக் கொண்டு நடத்தினால் தான் தமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்ற நிலை உள்ளது என்பது மக்களின் கருத்தாக உள்ளது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
தேர்தல் நடத்தை விதி அமல் என அறிவிக்கப்பட்ட பின்னர் சட்டம் ஒழுங்கு தேர்தல் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வருகிறது. தேர்தல் ஆணையர் ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். நேற்றும் இன்றும் முஸ்லிம்கள் ரம்ஜான் தொழுகை என்ற பெயரில் அரசின் பள்ளி மைதானங்களில் நடத்தி உள்ள செய்திகளை காண்கிறோம். தேர்தல் வாக்கு சாவடி மையங்களாக உள்ள பள்ளி வளாகங்களில் மத சம்பந்தமான, முஸ்லிம்கள் பயன்படுத்த அனுமதித்தது சட்டரீதியாக தவறானது அதிலும் கோவை குனியமுத்தூரில் சட்டவிரோத கட்டிடம் என நீதிமன்றத்தால் சீல் வைக்கப்பட்ட இடத்தை திறந்து தொழுகை நடத்த அனுமதித்துள்ளனர். இந்த சட்டவிரோத செயலுக்கு காவல்துறை பந்தோபஸ்து இருந்திருப்பது வெட்கக்கேடானது.
திருப்பூரில் தேர்தல் மையமாக உள்ள பள்ளியில் தொழுகை நடத்தியுள்ளனர். கன்னியாகுமரியில் 40 சவுண்ட் பாக்ஸ்கள் வைத்து மைதானத்தில் தொழுகை நடத்த அரசு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். இதனை பொதுமக்கள் தட்டி கேட்ட பிறகு அதனை ரத்து செய்துள்ளனர். அதே கன்னியாகுமரியில் ராமநவமி ஊர்வலத்திற்கு தேர்தலை காரணம் காட்டி தடை விதித்தது மாவட்ட நிர்வாகம் என்பது நினைவிருக்கலாம். அதன்பிறகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே நடந்த இடத்தில் மட்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனால் தற்போதும், கடந்த பல ஆண்டுகளாகவும் கூட ரம்ஜான் தொழுகைகள் பல இடங்களில் எந்த தடையும் இல்லாமல் நடந்து வருவதை தேர்தல் ஆணையம் கண்ணைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறது. மதத்தின் பெயரால் வாக்கு சேகரிக்கக் கூடாது எனச் சட்டம் இருந்தும் திமுகவினர் பொள்ளாச்சியில் கடவுள் படங்கள், ஏசு மற்றும் மெக்கா படங்களை எடுத்துக் கொண்டு சென்று வீடுவீடாக ஓட்டு கேட்டுள்ளனர். கிறித்துவ பேராயர்கள், ஆயர்கள் அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக கூட்டம் நடத்துவது சம்பந்தமாக எஸ்தர் மேரி என்பவர் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார். இப்படி பல சம்பவங்களை பார்க்கும்போது தேர்தலை வேறு மாநில அரசு அதிகாரிகளைக் கொண்டு நடத்தினால் தான் தமிழகத்தில் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்ற நிலை உள்ளது என்பது மக்களின் கருத்தாக உள்ளது. இதுபோன்ற நடவடிக்கையால் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் தேர்தல் முறையாக நடைபெறுமா என்ற சந்தேகம் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் முறையான விளக்கம் அளிக்க இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.