காலிஸ்தான் பயங்கரவாதிகளின் தொடர் உயிரிழப்பு இந்தியன் RAW-வை முன்வைத்து பாரதத்தை குற்றம் சாட்டும் கனடா – உண்மை பிண்ணனி

காலிஸ்தான் பயங்கரவாதிகளின் தொடர் உயிரிழப்பு இந்தியன் RAW-வை முன்வைத்து பாரதத்தை குற்றம் சாட்டும் கனடா – உண்மை பிண்ணனி

Share it if you like it

கடந்த பல ஆண்டுகளாக கனடா – பிரிட்டன் – ஆஸ்திரேலியா – அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அங்கிருக்கும் இந்திய தூதரகங்கள் இந்தியர்களின் ராஜிய அலுவலகங்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது பல்வேறு தொடர் தாக்குதலை அரங்கேற்றினார்கள். ஆனால் தூதரகங்கள் மீது தாக்குதல் தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறிய பிறகு கூட சம்பந்தப்பட்ட நாடுகளில் கடுமையான நடவடிக்கைகள் ஏதும் இல்லை. அதன் பிறகு பாரதத்தின் வெளியுறவுத் துறையில் இருந்து உரிய கவன ஈர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல்கள் முன்வைத்த பிறகும் அந்தந்த நாடுகளில் எந்த நடவடிக்கையும் இல்லை . உடனடியாக பாரதத்தில் இருந்த சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பை பாரதம் விலக்கிக் கொண்டது . அதன் பிறகு தான் சம்பந்தப்பட்ட நாடுகள் சுதாரித்துக் கொண்டு அங்குள்ள காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை தூதரகங்களுக்கு உரிய பாதுகாப்பு என்று வழிக்கு வந்தது.

ஆனால் அப்போதும் கனடா நாட்டில் இருந்து எந்த ஒரு ஒத்துழைப்பும் சட்ட நடவடிக்கையும் இதுவரை இல்லை. கனடா நாட்டில் இருந்த இந்திய தூதரக அதிகாரிகளின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டி கொலை மிரட்டல் எச்சரிக்கையை காலிஸ்தான் பயங்கரவாதிகள் வெளியிட்டார்கள். அதன்பிறகு கூட சம்பந்தப்பட்ட அமைப்புகள் மீது இதற்கு துணை நின்ற உள்ளூர் நபர்கள் மீதும் கனடா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்திய தரப்பில் பயங்கரவாதம் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஆதாரங்களுடன் குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவில் அடையாளம் காணப்பட்டார்கள்.

அவர்களில் 30க்கும் மேற்பட்டவர்கள் கனடா நாட்டில் அரசியல் தஞ்சமாகவும் கனடா நாட்டு குடியுரிமையோடும் இன்று வரை பாதுகாப்பாக வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலர் போலி பாஸ்போர்ட் போலி விசா உள்ளிட்ட சட்ட விரோத குடியேறிகளாகவும் இருந்து வருகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் ஆங்காங்கே விபத்து தனிமனிதக் கொலைகளால் மரணம் அடைந்திருக்கிறார்கள். அப்படி ஒரு தனிமனித கொலையாக மரணித்த ஹர்திப் சிங் என்னும் காலிஸ்தான் பயங்கரவாதியின் கொலை விவகாரத்தை கையில் வைத்து தான் கனடா நாட்டு பிரதமர் இன்று பாரதத்தின் மீது அவதூறு பரப்பி வருகிறார். கனடா நாட்டு உளவுத்துறை காவல்துறை விசாரணையில் உரிய ஆதாரங்கள் கிடைத்ததன் பேரிலேயே குற்றச்சாட்டு வைப்பதாக ஆரம்பத்தில் கனடா நாட்டு பிரதமர் சொன்னதை கேட்டு பல்வேறு நாடுகளும் யோசிக்க தொடங்கியது. கனடா நாட்டு மக்களும் அதை நம்பி கேள்வி எழுப்ப தொடங்கினார்கள்.

ஆனால் பாரதம் அதை அதிகாரப்பூர்வமாக மறுத்ததோடு கனடாவின் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லாததை உறுதிப்படுத்தியது. மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் எல்லாம் இங்கு தேடப்படும் குற்றவாளிகளாக பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டு இருப்பதும் அவர்களின் பயங்கரவாத பின்னணிகள் அவர்களுக்கு இருக்கும் சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் உள்ளிட்டவற்றை ஆதாரத்தோடு பல்வேறு நாடுகளின் உளவுத்துறைகளுக்கும் பகிர்ந்தது. ஏற்கனவே கனடா நாட்டு உளவுத்துறையிடம் இவையெல்லாம் வழங்கப்பட்டது. வெளியுறவுத் துறையின் மூலம் கனடா நாட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு போகப்பட்டு அவையெல்லாம் கனடா நாட்டு அரசால் அலட்சியப்படுத்தப்பட்டதையும் பொதுவெளியில் அம்பலப்படுத்தியது.

இதில் பாரதத்தின் உண்மை தன்மையும் உறுதியான நிலைப்பாட்டையும் புரிந்து கொண்ட சர்வதேச நாடுகள் கனடாவின் அவதூறு பிரச்சாரத்தை புறம் தள்ளியது. பாரதத்தின் உண்மையான நிலைப்பாட்டையும் கனடா நாடு காலிஸ்தான் பயங்கரவாதத்தின் புகலிடமாகவும் பாரதத்திற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு கனடா நாடு உறுதுணையாக இருப்பதைப் போல ஒரு பிம்பம் உலக அளவில் வளர்வதையும் கண்ட கனடா மக்கள் தற்போது அவர்கள் நாட்டு அரசிற்கு எதிராக கேள்வி எழுப்புகிறார்கள்.

உளவுத்துறை விசாரித்து வருகிறது. காவல்துறையில் ஆவணம் இருக்கிறது என்று பேசிய கனடா நாட்டு பிரதமர் இன்று கனடா நாட்டு மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலில்லாமல் எதிர்க்கட்சிகள் கேட்கும் ஆவணத்தையும் கொடுக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். காரணம் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவு அங்குள்ள சீக்கிய மக்களின் வாக்கு வங்கி இந்த இரண்டையும் தன் பக்கம் உறுதியாக நிறுத்தி சரிந்து கிடந்த தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தோடு செயல் பட்டவர்.நடந்த தனி மனித கொலைகளையும் விபத்துகளையும் இந்திய உளவுத்துறையோடு ஒன்றிணைத்து பழியை பாரதத்தின் மீது போட்டு விடலாம். அதன் பலனை உள்நாட்டு அரசியலில் நாம் அறுவடை செய்து கொள்ளலாம். அதோடு சர்வதேச அளவிலும் பாரதத்தை தட்டி வைத்த கனடா வல்லரசு என்ற பெருமையையும் தேடிக் கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு இன்று அவரது நினைப்பில் மண் விழுந்திருக்கிறது.

சர்வதேச சமூகம் பாரதத்தின் நியாயத்தை உணரும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அனைத்தையும் தெளிவாக தெரிவித்து விட்டு தன் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது. பாரதத்தின் மீது இப்படி ஒரு அவதூறு பிரச்சாரத்தை முன்வைத்தால் அதற்கு ஆதரவாக பாகிஸ்தான் சீனா என்று முதலில் பாரதத்தின் பகை நாடுகள் ஆதரவுக்கு வரும் . அதன் பிறகு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் முழுமையாக கனடா நாட்டின் ஆதரவு நிலைப்பாட்டில் பாரதத்தை நேரடியாக எதிர்த்து நிற்கும் . அதன் மூலம் உலகளாவிய ஒரு லாபி உருவாகும். பல்வேறு நாடுகளும் பாரதத்தை விமர்சித்து கனடாவின் பின் அணிவகுப்பு என்று திட்டமிட்டு களத்தில் இறங்கிய கனடா நாட்டு பிரதமர் இன்று அவர் திட்டம் தவிடு பொடியாகி ராஜீய தோல்வியில் நிற்கிறார். சொந்த மண்ணில் மக்களின் நம்பகத்தன்மையும் செல்வாக்கும் இழந்து நிற்கிறார்.

இதையெல்லாம் வைத்து பாரதம் பின்வாங்க போவதுமில்லை. காலிஸ்தான் பயங்கரவாதிகளையும் அதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச ஆதரவு நிலைப்பாடுகளையும் கண்டு அஞ்சப் போவதும் இல்லை. கடந்த காலங்களில் சேகரித்து வைத்திருக்கும் ஆவணங்கள் சமகாலத்தில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் மூலம் வெளிப்படும் உண்மை முகங்கள் என்று அத்தனையும் பொதுவெளியில் அம்பலப்படுத்தும் . அதன் மூலம் சர்வதேச நாடுகள் இடையே பாரதத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் தேசிய இறையாண்மைக்கும் எதிராக செயல்படும் உள்நாட்டு வெளிநாட்டு சதிகளையும் அதன் பின்னணியில் இருக்கும் பல்வேறு வலை பின்னல்களையும் பொதுவெளியில் ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தும் .

உலக நாடுகள் அத்தனையையும் அதற்கு எதிராக கேள்வி எழுப்ப வைக்கும். எந்த சர்வதேச நாடுகள் கடந்த காலங்களில் காஷ்மீர் காலிஸ்தான் உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து பாரதத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறிவுரைகள் வாரி வழங்கியதோ ? அதே சர்வதேச நாடுகள் முன் கொடுக்கப்பட்ட ஆவணங்களை வைத்து கேள்வி எழுப்ப வைத்து தனக்கான நியாயத்தை உலக அரங்கில் வென்றெடுக்கும். அது காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல பாரதத்தின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கும் அத்தனை உள்நாட்டு வெளிநாட்டு சதிகளுக்கும் முடிவு கட்டும் இறுதி நடவடிக்கையாக இருக்கும்.


Share it if you like it