மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சின்னம் தொடர்பாக முடிவினைத் தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் இவ்வாறாக மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளரின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.
இந்நிலையில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதையடுத்து, மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கோரிய மனு மீது இன்று (புதன் கிழமை) காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. “இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்க முடியும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் ஒதுக்க முடியாது” என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து மதிமுகவுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.