தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எம்பி கனிமொழி, திருச்செந்தூர் எம்எல்ஏவும், தமிழக மீன்வளத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரதமர் மோடியை தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீத தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்து இருந்தார். அதோடு அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய வீடியோவும் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அனிதா ராதகிருஷ்ணன் பேச்சு தொடர்பாக பாஜக சார்பில் தேர்தல் அதிகாரியிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.