மதபோதகரை தாக்கியது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கும் நிலையில், கட்சித் தலைமையும் நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலத்தின் பேராயராக இருக்கும் பர்னபாஸ், திருமண்டல கல்வி நிலவரக் குழு செயலாளர் மற்றும் பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளியின் தாளாளராக இருந்த தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்தை, அப்பதவிகளில் இருந்து நீக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் அலுவலக அறைக்கு பூட்டு போட்டு விட்டனர். ஆகவே, எம்.பி. ஞானதிரவியம் மீது தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபுள் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகத்திற்கு நேற்று சென்ற மதபோதகர் காட்பிரே நோபுள், அலுவலக அறைகளை திறக்கும்படி வலியுறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள், மதபோதகர் காட்பிரே நோபுளை ஓட ஓட விரட்டி அடித்தனர். இக்காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், தாக்குதலுக்குள்ளான மதபோதகர் காட்பிரே நோபிள் மாநகர போலீஸ் கமிஷனரிடம் எம்.பி. ஞானதிரவியம் உள்ளிட்டோர் மீது புகார் அளித்தார். இதன் பேரில், தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் மற்றும் லே செயலாளர் ஜெயசிங் மற்றும் சொத்து நிர்வாக அதிகாரி மூன்றடைப்பு ஜான், ஆடிட்டர் மைக்கேல் உட்பட 33 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இதனிடையே, கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், 7 நாட்களுக்குள் தலைமை கழகத்திற்கு நேரிலோ அலல்து தபால் மூலமோ விளக்கம் அளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தி.மு.க. எம்.பி. ஞானதிரவியத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.