சந்தேஷ்காலி வழக்கில் 5 பேர் மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு !

சந்தேஷ்காலி வழக்கில் 5 பேர் மீது சிபிஐ எப்ஐஆர் பதிவு !

Share it if you like it

மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், நில அபகரிப்பு குற்றங்கள் தொடர்பான வழக்கில் 5 பிரமுகர்கள் மீது சிபிஐ முதல் எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

கொல்கத்தா அருகில் உள்ளது சந்தேஷ்காலி கிராமம். திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஷாஜகான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களை அபகரித்து மீன் வளர்ப்புக்குச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதாகவும், உள்ளூர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஷாஜகான் ஷேக் கைது செய்யப்பட்டார். அவரை கடந்த பிப்ரவரி 29-ம் தேதி திரிணமுல் கட்சி 6 ஆண்டுகள் இடைநீக்கம் செய்தது.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி உத்தரவிட்டது. வழக்கு தொடர்பான புகார்களைப் பதிவு செய்திட ஒரு மின்னஞ்சல் முகவரியை சந்தேஷ்காலி வாசிகளுக்கு சிபிஐ சுற்றில் விட்டது. அதில் எதிர்பார்த்ததைவிட அதிகமான எண்ணிக்கையில் புகார்கள் குவிந்தன. இந்த புகார்களின் மீதுவிசாரணை நடத்த சிறப்பு குழுவை சிபிஐ அனுப்பி வைத்தது.

கள ஆய்வில் சந்தேஷ்காலி கிராமத்தின் விளைநிலங்களை அபகரித்து மீன் வளர்ப்புக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தியது மற்றும் உள்ளூர் பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்தது ஆகிய குற்றங்களுடன் நேரடி தொடர்புடைய 5 பிரமுகர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நீதிமன்றவிசாரணை வரும் மே 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.


Share it if you like it