மத்திய பா.ஜ.க. அரசின் ராஜதந்திர நடவடிக்கையால், சீன உளவுக் கப்பலான ‘யுவான் வாங் 5’, இலங்கை ஹம்பந்தோடா துறைமுகத்துக்கு வருவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
சீனாவின் உளவுக் கப்பல் ‘யுவான் வாங் 5’, இலங்கை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக எதிர்வரும் 11-ம் தேதி வருவதாக இருந்தது. இந்த கப்பல் நிலைநிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து 750 கி.மீ. தூரம் கொண்ட பகுதிகளை கண்காணிக்கவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இக்கப்பல் இலங்கைக்கு வருவது, இந்தியாவுக்கு பாதுகாப்பு ரீதியிலான அச்சுறுத்தல் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். இதையடுத்து, இது தொடர்பாக சீன அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தும்வரை, இக்கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்ததோடு, கவலையும் தெரிவித்திருந்தது மத்திய பா.ஜ.க. அரசு.
ஆனால், ஹம்பந்தோடா துறைமுகத்துக்கு சீன கப்பல் வருவதை நியாயப்படுத்தும் வகையில், இலங்கை அரசு கருத்து வெளியிட்டது. மேலும், ஆகஸ்ட் 11-ம் தேதி வரும் சீன கப்பல், பராமரிப்புப் பணிகளை நிறைவு செய்து கொண்டு, ஆகஸ்ட் 17-ம் தேதி தனது பயணத்தைத் தொடரும் என்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. இதையடுத்து, இலங்கையை ஒட்டியிருக்கும் தமிழக அரசு கடலோர பாதுகாப்பை பலப்படுத்தியது. மேலும், சர்வதேச கடல் எல்லை பகுதியில், இந்திய கடற்படையும், இந்திய கடலோர காவல் படையும் ரோந்து மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்தின. அதோடு, சீன கப்பலின் வருகை, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று இந்திய ‘ரா’ உளவு அமைப்பு இலங்கைக்கு எச்சரிக்கை அனுப்பியது.
இதனிடையே, கொழும்பிலுள்ள இந்திய தூதரக பணியுடன் இணைக்கப்பட்டுள்ள இந்திய ராணுவ லெஃப்டினென்ட் கர்னல் புனீத் சுஷீல் மற்றும் அதிகாரிகள், இந்திய துணைத் தூதர் திபின் தலைமையில் ஹம்பந்தோடா துறைமுக அதிகாரிகளையும், இலங்கை கடற்படை தென் பிராந்திய தளபதி மற்றும் ராணுவ உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேசி, இந்தியாவின் கவலையை இலங்கை தரப்பிடம் பதிவு செய்தனர். அதேபோல, ‘யுவான் வாங் 5’ கப்பல், சீனா ராணுவத்தின் (பி.எல்.ஏ.) ஆதரவு அமைப்பால் இயக்கப்படுவதாக, அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகனும் கூறியது. இந்த அழுத்தங்கள் காரணமாக, மேலதிக ஆலோசனைகள் செய்யப்படும் வரை, யுவான் வாங் 5 கப்பலின் வருகை தேதியை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் மத்திய பா.ஜ.க. அரசின் ராஜதந்திர நடவடிக்கை கைகொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.