ட்விட்டர் நிறுவன முன்னாள் சிஇஓ  குற்றச்சாட்டு: மத்திய அமைச்சர் மறுப்பு!

ட்விட்டர் நிறுவன முன்னாள் சிஇஓ குற்றச்சாட்டு: மத்திய அமைச்சர் மறுப்பு!

Share it if you like it

ட்விட்டர் நிறுவன முன்னாள் சிஇஓ-வின் குற்றச்சாட்டிற்கு மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது :

“ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததாக ஜேக் டார்ஸி கூறியிருப்பது உண்மையல்ல. என்ன காரணத்திற்காக அவர் இவ்வாறு கூறி இருந்தாலும் அது கற்பனையானதே. இந்தியாவில் இயங்கும் எந்த ஒரு சமூக ஊடக நிறுவனமும் அது உள்நாட்டு நிறுவனமோ அல்லது வெளிநாட்டு நிறுவனமோ, சிறிய நிறுவனமோ பெரிய நிறுவனமோ அவை இந்திய சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு தொடர்ந்து உறுதியாக இருக்கிறது. இந்திய குடிமக்களிடம் நீங்கள் ஒரு பொருளை விற்கிறீர்கள் எனும்போது இந்திய சட்டத்தை கடைப்பிடிப்பது கட்டாயம்.

கடந்த 2 ஆண்டுகளாக ட்விட்டர் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். ட்விட்டர் தனது சமூக ஊடக தளத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. சிலரது குரலை ஒடுக்குகிறது; சிலரது சமூக ஊடகக் கணக்குகளை முடக்குகிறது. இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இதுபோன்ற செயல்களில் ட்விட்டர் ஈடுபட்டுள்ளது. ஜேக் டார்ஸியின் தாக்குதல் என்னை அதிருப்தி அடையச் செய்துள்ளது. அவர் உண்மைக்கு மாறாக பேசி இருக்கிறார். அவர் பேசி இருப்பது பொய்யானது; தவறானது. இந்திய அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் சட்டப்பிரிவுகளான 14, 19, 21 ஆகியவற்றை ட்விட்டர் மீறி உள்ளது. ட்விட்டராக இருந்தாலும் வேறு எந்த சமூக வலைதளங்களாக இருந்தாலும் அவை இந்தியர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக செயல்படக்கூடாது. இந்திய சட்டங்களை மீறக்கூடாது.” இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


Share it if you like it