பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட ஜே.கே.ஜி.எஃப். எனப்படும் ஜம்மு காஷ்மீர் கஜ்னவி படையை மத்திய அரசு பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்திருக்கிறது.
பாகிஸ்தானை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்புகள் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது. இந்த பயங்கரவாத அமைப்புகள் ஜம்மு காஷ்மீரில் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததோடு, பயங்கரவாத செயல்களையும் அரங்கேற்றி வந்தன. இதையடுத்து, மேற்கண்ட இரு பயங்கரவாத அமைப்புகளுக்கும் இந்திய அரசு தடை விதித்தது. எனவே, லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், அதன் துணை அமைப்பான ‘த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட்’ அமைப்பிலும், ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், அதன் துணை அமைப்பான ‘பீப்பிள்ஸ் ஆன்ட்டி பாசிஸ்ட் ஃப்ரன்ட்’ அமைப்பிலும் இணைந்து செயல்பட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து, மேற்கண்ட 2 பயங்கரவாத அமைப்புகளுக்கும் மற்றும் அந்த அமைப்புகளைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகளுக்கும் தடை விதித்து மத்திய அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. ஆகவே, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட், பீப்பிள்ஸ் ஆன்ட்டி பாசிஸ்ட் ஃப்ரன்ட் ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஜே.கே.ஜி.எஃப். (ஜம்மு காஷ்மீர் கஜ்னவி படை) என்கிற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் கஜ்னவி படைக்கும் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ஜம்மு காஷ்மீர் கஜ்னவி படை பல்வேறு ஊடுருவல் நடவடிக்கைகள், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல், காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பாதுகாப்புப் படையினரை தொடர்ச்சியாக மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது மேலும், சமூக வலைதளங்களை பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராக காஷ்மீர் மக்களை தூண்டியிட்டு, பயங்கரவாத அமைப்புகளில் சேர்வதற்கு அழைப்பு விடுத்து வருகிறது. எனவே, ‘உபா’ எனப்படும் சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம் அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஜம்மு காஷ்மீர் கஜ்னவி படை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்படுகிறது” என்று தெரிவித்திருக்கிறது.
அதேபோல, மற்றொரு அறிவிப்பில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்விந்தர் சிங் சாந்து என்கிற ரிண்டாவை மத்திய உள்துறை அமைச்சகம் பயங்கரவாதியாக அறிவித்திருக்கிறது. இவர், 2021-ம் ஆண்டு பஞ்சாப் போலீஸ் தலைமையகத்தில் தாக்குதல் நடத்துவதற்கு முக்கிய மூளையாகச் செயல்பட்டவர். தற்போது, பாகிஸ்தானின் லாகூரில் மறைந்திருக்கும் இவர், தடைசெய்யப்பட்ட சர்வதேச பப்பர் கால்சா அமைப்பைச் சேர்ந்தவர். இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் மத்திய அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட 54-வது நபராவார். இவருக்கு எதிராக ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.