காளி பட திரைப்பட இயக்குனர் லீனா மணிமேகலைக்கு கனடா எம்பி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
மாடத்தி, செங்கடல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் லீனா மணிமேகலை. இவர், கம்யூனிஸ்ட், தி.க. மற்றும் ஆளும் தி.மு.க அரசிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், இவர் எடுத்த டாக்குமென்டரி திரைப்படம் தான் ‘காளி’. இப்படத்தின், பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி ஹிந்துக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இதில், காளி வேடம் அணிந்த பெண்மணி ஒருவர் சிகரெட் புகைப்பது போன்றும், மற்றொரு கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் கொடியை பிடித்து இருப்பது போன்று, அந்த போஸ்டர் அமைந்து இருந்ததே ஹிந்துக்களின் கடும் கோவத்திற்கு காரணம்.
இதனிடையே, பா.ஜ.க மூத்த தலைவரும் பிரபல நடிகையுமான குஷ்பு, படைப்பாற்றலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே படைப்பாளிகள் கடவுளை இப்படி சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தனது கண்டனத்தை அண்மையில் பதிவு செய்து இருந்தார்.
இந்த நிலையில் தான், கனடா நாட்டை சேர்ந்த எம்பியும் இந்தியருமான சந்திரா ஆர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது; படத்தயாரிப்பாளர் லீனா மணிமேகலையின் காளி போஸ்டரைப் பார்த்தது வேதனை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, கனடாவில் உள்ள பாரம்பரிய ஹிந்து எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு குழுக்கள் ஒன்றிணைந்து ஊடகங்களில் ஹிந்து மதத்திற்கு எதிரான கட்டுரைகள் மற்றும் நமது ஹிந்து கோவில்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாக வேதனை தெரிவித்து இருக்கிறார்.
கோடிக்கணக்கான ஹிந்துக்களின் வழிபாட்டுக்குரிய காளி தெய்வத்தை இழிவுப்படுத்திய லீனா மணிமேகலைக்கு எதிராக நாடு முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.