சந்திரயான் – 3 விண்கலம் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அது வெற்றி பெற வேண்டுமென, விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து சந்திரயான் – 3 ஜூலை 14-ம் தேதி மதியம் 2.35 மணிக்கு ஏவப்படுகிறது. சந்திரயான் –3, தனித்தன்மையான லேண்டர் மாடூல், ப்ரொபல்ஷன் மாடூல் மற்றும் ரோவர் ஆகியவை அடங்கியது. கிரகங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தேவைப்படும் புதிய தொழில்நுட்பங்களை முன்னேற்றுவது இதன் நோக்கமாகும். இதன் லேண்டர் சந்திரனினில் குறிப்பிட்ட இடத்தில் ரோவரை நிலைநிறுத்தக்கூடிய சிறப்புகள் பெற்றது. இது நிலவில் வேதியியல் ஆய்வுகளை நடத்தும். லேண்டர் மற்றும் ரோவர் இரண்டிலும் அறிவியல் சுமைகளை ஏற்றிச்சென்று நிலவின் வெளியில் ஆய்வுகளை நடத்தும்.
சந்திராயன் 2 தோல்வியில் முடிந்ததால், சந்திரயான் – 3ஐ வெற்றிகரமாக செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்பது இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறு. ஏனெனில், இதிலிருந்து பெறப்படும் தகவல்கள் உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆராய்ச்சிக்கு உதவக்கூடியவையாக இருக்கும். ஆகவே, இத்திட்டம் உலகில் தலைமையிடத்தில் இருக்கும் நாடுகளுடன் இந்தியாவை நிறுத்தி இருக்கிறது. இந்த நிலையில், சந்திராயன்-3 நாளை விண்ணில் செலுத்தப்படவிருக்கும் நிலையில், இந்த விண்கலத்தின் விஞ்ஞானிகள் குழுவினர் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தனர்.