நிலவில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இந்திய இஸ்ரோவில் இருந்து ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பயணமான சந்திராயன் மூன்று விண்கலம் கடந்த வாரம் நிலவில் வெற்றிகரமாக ரை இறங்கியது. இதுவரையில் நிலவின் வட துருவம் நோக்கியே உலக நாடுகள் பயணப்பட்ட நிலையில் முதன் முதலில் தென் துருவம் நோக்கி பயணப்பட்ட பாரதம் முதல் இரண்டு முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மூன்றாம் முயற்சியில் முழு வெற்றி அடைந்திருக்கிறது. இந்த வெற்றியின் அடையாளத்தை நாடு கொண்டாடி வரும் வேளையில் சந்திராயன் மூன்றில் பயணித்த விக்ரம் லாந்தர் ப்ரக்யான் ரோவர் தடம் பதித்த நிலவின் தரை பகுதிகளுக்கு சிவசக்தி என்று பெயரிட்டு பிரதமர் மோடி கௌரவப்படுத்தியுள்ளார். இதை மோடியின் இந்துத்துவ சார்பு என்று மத அரசியல் செய்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கிறார்கள்.
பிரயாணங்கள் – யாத்திரையை எல்லாம் தெற்கு நோக்கி துவங்குவது பாரதத்தின் ஆன்மீக நியதி. சந்திரனை மனோ காரகனாக மாத்ரு காரகனாக வணங்குபவர்கள். சந்திரனை இறைவனாக ஆலயம் அமைத்து வழிபடுபவர்கள் பாரதியர்கள். அந்த வகையில் அந்த நிலவின் தென் துருவத்தை நோக்கியே இந்தியாவின் விண்வெளிப் பயணம் அமைந்தது . அந்தப் பயணத்திற்கு பிரயாணபட்ட விண்கலத்திற்கு சந்திரனை ஆய்வு செய்யும் விண்கலம் என்ற பொருளிலேயே சந்திராயன் என்று பெயரிட்டது. அதில் சந்திரனை ஆய்வு செய்யப் போகும் இயந்திரத்திற்கும் பிரக்யான் என்ற பெயரில் சந்திரனின் பெயரையே முன்னிறுத்தியது. இதில் எந்த விதமான சாதி மத அரசியல் கலப்பின்றி இந்த மண்ணின் பாரம்பரிய நியதியை பண்பாடு கலாச்சாரம் சார்ந்த வழிமுறைகளை அப்படியே பின்பற்றினார்கள்.
இந்தியா என்ற பெயரில் இருக்கும் இந்து என்பதே சந்திரனின் ஒரு பெயர் தான். சந்திரனை பூஜிப்பவர்கள். அந்த சந்திரனை தலையில் வைத்து உச்ச கௌரவம் வழங்கிய சிவனை முழு முதல் கடவுளாக வணங்குபவர்கள் இந்தியர்கள். இந்த இரண்டின் அடிப்படையில் சந்திர மண்டலத்தில் பிரக்யான் ரோவர் தடம் பதித்த பகுதிகளுக்கு சிவனின் பெயரை சூட்டுவது பாரம்பரிய இயல்பு . அதில் சிவனின் உண்மையான தார்ப்பர்யமான ஆண் பெண் சம நீதியை உண்மையான சமூக நீதியை பறைசாற்றும் அர்த்தநாரி திருக்கோலம் தான் சிவசக்தி என்னும் இறை வழிபாட்டின் வழிபாடு. அந்த வகையில் நிலவின் சந்திராயன் தடம் பதித்த ஆளுகை பகுதிக்கு சிவசக்தி என்று பிரதமர் பெயர் சூட்டியுள்ளார்.
இந்திய வரலாற்றில் பெண்களின் வீரமும் தியாகமும் அர்ப்பணிப்பும் இந்த தேசத்திற்கு வழங்கிய பங்களிப்பு அபரிமிதமானது. அதன் வழியில் சமகாலத்திலும் இந்திய இஸ்ரோவில் பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்பு அபரிமிதமானது. சந்திராயன் ஒன்று இரண்டு மூன்று என்ற தொடர்ச்சியான நிலவின் ஆய்வு பணிகளில் முழுமையான பங்களிப்பை வழங்கியது இந்திய இஸ்ரோவில் இருக்கும் பெண் விஞ்ஞானிகளின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அபாரமானது. அவர்களை கௌரவப்படுத்தும் வகையிலும் தேசத்தையே தாயாக பாவிக்கும் பாரதத்தின் மாண்பின் அடிப்படையிலும் உயர்ந்த பெண்ணியம் போற்றும் பாரதத்தின் தர்மத்தின் வழியில் பெண்மையை கவுரவப்படுத்தும் வகையிலாக சிவசக்தி என்ற பெயரை அவர் சந்திரனில் முன்மொழிந்திருக்கிறார் . இதில் சந்திரன் என்ற பெயர் பெயரளவில் ஆண்பால் என்ற தோற்றத்தை குறித்தாலும் உண்மையில் கிரகங்களில் சந்திரன் பெண் கிரகமாகவே ஜோதிட வழியில் அறியப்படுகிறது. சூரியனை தந்தையாகவும் சந்திரனை தாயாகவும் குறிப்பிடும் இந்த மண்ணின் ஆன்மீக அறிவியலான வானியல் சாஸ்திர கலையின் அடிப்படையில் சந்திரனின் சிவசக்தி என்று பெண்மையை முன்னிறுத்தும் பெயரை குறிப்பிட்டு காலம் காலமாக யுகங்கள் கடந்து விஞ்ஞான அறிவின் மூலமான பாரதத்தின் வானியல் சாஸ்திரகலை நியதியை மோடி பறைசாற்றுகிறார்.
ஆனால் இந்த சிவசக்தி என்ற பெயரிட்ட காரணத்தை வைத்து மதசார்பு என்று எதிர்மறை விமர்சனம் பேசுபவர்கள் மோடி தான் சந்திராயனை வடிவமைத்தாரா? அல்லது அவர்தான் இந்த வெற்றிக்கு காரணமா ? சந்திரனை கூட ஹிந்துத்துவம் புகுத்த பார்க்கிறார்களா ? என்ற ரீதியில் சில்லறைத்தனமான விமர்சனங்களை முன்வைப்பது அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற அரசியலையும் கண்ணியமற்ற விமர்சனங்களையும் வழக்கமான வாக்கு வங்கி அரசியலையுமே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. தேசத்தின் பாதுகாப்பு விஷயத்தில் கூட அரசியல் செய்பவர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பையும் அதன் அர்பணிப்பையும் கூட வாழ்த்த மனம் இன்றி சில்லறை அரசியல் செய்தவர்களுக்கு இந்த சிவசக்தி பெயரை வைத்து மத அரசியல் செய்வது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை தான்.
எதிர் கட்சிகள் என்ற பெயரில் தேசத்தின் எதிரி கட்சிகளாக அரசியல் செய்பவர்களுக்கு பெண் விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பையும் கவுரவ படுத்தவும் சந்திரனின் ஆன்மீகத் தார்ப்பரியம் இந்திய வானியல் சாஸ்திர கலையின் அறிவியல் தார்பரியங்களை முன்னிறுத்தும் சிவசக்தி என்ற ஆன்மீக நியதியின் தார்பர்யமும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வகையில் அவர்களின் போலி பெண்ணியமும் ஆழ்ந்த அறிவற்ற மேம்போக்கான அரசியல் புரிதலையும் அவர்களாகவே வெளிப்படுத்துகிறார்கள் .அந்த வகையில் அவர்களின் இந்த குற்றச்சாட்டுகள் எல்லாம் அவர்களுக்குத்தான் பின்னடைவாக இருக்குமே தவிர மோடிக்கோ சந்திரனுக்கோ இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எந்த பின்னடைவையும் கொடுக்கப் போவதில்லை.
ஒரு வீட்டில் தம்பதியர்களுக்கு குழந்தை பிறக்கும் பட்சத்தில் அந்த குழந்தைக்கு தாய் – தந்தை என்ற வகையில் அவர்கள் முழு உரிமையானவர்கள் என்றாலும் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் பொறுப்பை அந்த குடும்பத்தில் இருக்கும் கர்த்தா என்னும் வீட்டு பெரியவருக்கு தான் கொடுப்பார்கள் ..அந்த குடும்பத்தின் கர்த்தா தனது சுய வெறுப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு அந்த குடும்பத்தின் பாரம்பரியம் – குழந்தையின் எதிர்காலம் -பெற்றோர்களின் மன ஓட்டம் என்று அனைத்தையும் பிரதிபலிக்கும் வகையில் தான் அந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவார். .அதுதான் பெரிய மனிதனுக்கு அழகு .அந்த வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் பெரும் உழைப்பு – அதில் உள்ள பெண் விஞ்ஞானிகளின் அளவற்ற அர்ப்பணிப்பு சந்திராயனின் வெற்றி சந்திரனின் மாண்பு மகத்துவம் போற்றும் பாரதத்தின் ஆன்மீக தர்மம் என்று அனைத்தையும் உணர்ந்து அவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல் சந்திரனின் சந்திராயன் கால் பதித்த முதல் பகுதிக்கு சிவசக்தி என்ற பெயரிட்டு மோடி தான் ஒரு இந்தியாவின் கர்த்தா -பெரிய மனிதர் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
ஆனால் புரிந்துகொள்ள இயலாத புரிந்து கொள்ள தயாரில்லாத எதிர்கட்சிகள் சந்திரனுக்கும் கூட காவிச் சாயம் பூச பார்க்கிறார்கள் என்று வழக்கமான மத அரசியலை செய்து அவர்களின் சிறுபிள்ளைத்தனமான அரசியலை இதிலும் வெளிப்படுத்துகிறார்கள் . நிலவின் பகுதிக்கு பெயர் சூட்டும் போது மோடி அவர் சார்ந்த கட்சியின் மூத்த தலைவர்கள் பெயரையும் அல்லது அவரது குடும்பத்தாரின் பெயரையோ முன்னிறுத்தவில்லை. மாறாக இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு இந்த தேசத்தின் பாரம்பரியத்தை முன்னிறுத்தும் வகையில் ஒரு பெயரை முன்மொழிந்திருக்கிறார் .அதை உலகமே வாழ்த்தி வரவேற்கிறது. ஆனால் உள்ளூரில் அதை எதிர்த்து மத ரீதியாக விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகளை சில்லறைத்தனம் எல்லாம் அவர்களின் வழக்கமான மோடி எதிர்ப்பு அரசியல் மற்றும் சிறுபான்மை மக்களின் மனம் குளிரச் செய்து அவர்களின் வாக்கு வங்கி அரசியலை தங்களின் பக்கம் இருக்கச் செய்யும் திட்டமிட்ட பெரும்பான்மை விரோத அரசியல் அன்றி வேறல்ல.
இதற்கு தமிழகத்தில் இருக்கும் சில கட்சிகள் – அமைப்புகள் பிரதமரை மத ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்வதும் சிவ சக்தி என்று பெயரிட்டதை எதிர்த்து போராட்டம் – ஆர்ப்பாட்டம் என்று அறிவிப்பு செய்வதெல்லாம் அவர்களின் அப்பட்டமான இந்து விரோத இந்திய விரோத மோடி எதிர்ப்பு அரசியலின் வெளிப்பாடு மட்டுமே. பல ஆண்டுகால இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு பாரதத்தின் பல நூறு கோடிகள் பொருளாதார என்பதன் வெளிப்பாடான சந்திராயன் ஒன்று – இரண்டு தோல்வி அடைந்தபோது அதை வெற்றி திருவிழாவாக கொண்டாடியவர்கள். அதே சந்திராயன் மூன்று வெற்றி பெற்ற போது கள்ள மவுனம் காத்தது அவர்களின் உண்மை தன்மையின் வெளிப்பாடு.
சந்திராயன் மூன்று வெற்றியின் போது இந்திய இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் மதிக்க தவறியவர்கள். தேசத்தின் வெற்றியை வரவேற்க தவறியவர்கள்.இந்திய விஞ்ஞானிகளுக்கும் இந்த வெற்றிக்கும் குறைந்தபட்ச வாழ்த்து கூட தெரிவிக்கும் மனிதாபிமானம் அற்றவர்கள் . அந்த வெற்றியை மோடி தலைமையிலான அரசுக்கு போய்விடக் கூடாது என்பதில் களம் கண்டு மடைமாற்றம் செய்யும் சில்லறை தனத்தை செய்தவர்கள். இன்று மோடி சந்திரனில் சிவசக்தி என்ற பெயரை முன்மொழிந்ததை எதிர்த்து போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று குதிப்பார்களானால் இவர்கள் பல்வேறு அமைப்புகள் கட்சிகள் பெயர்களில் இருந்தாலும் இவர்கள் அத்தனை பேரும் மோடி எதிர்ப்பு என்ற பெயரில் இந்திய எதிர்ப்பையும் பாசிச பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இந்து விரோத அரசியலையும் செய்யும் அந்நிய அடிவருடும் தேசவிரோதிகள் என்பதன் அடையாளமே.