சத்தீஸ்கரில் மனைவியை செல்போன் மூலம் விவாகரத்து செய்த இஷ்தியாக் ஆலம் என்கிற நபர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
இஸ்லாமிய சட்டப்படி, திருமணமான முஸ்லிம் ஆண்கள், தங்களது மனைவியை நிரந்தரமாகப் பிரிய விரும்பினால் 3 முறை தலாக் சொன்னால் போதும், விவாகரத்து செய்துவிட்டதாக அர்த்தம். இதே நடைமுறையே இந்தியாவிலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், முத்தலாக் செய்வதால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முத்தலாக் நடமுறை சட்ட விரோதம் என்று தெரிவித்தது. இதையடுத்து, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு 2017-ம் ஆண்டு முத்தலாக் முறைக்கு தடை விதித்து அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இதை சட்டமாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா மக்களவையில் நிறைவேறினாலும், மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இதனால், அச்சட்டம் காலாவதியானது. இதைத் தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் அமோக வெற்றிபெற்ற பா.ஜ.க., எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியிலும், முத்தலாக் தடை சட்ட மசோதாவை அமல்படுத்தியது. இதையடுத்து, இச்சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இச்சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு முஸ்லிம் பெண்கள் தங்களது நன்றிகளை தெரிவித்து வந்தனர்.
எனினும், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், இன்னும் முத்தலாக் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். கடந்த மார்ச் 28-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலத்தில், ஃபரூக் என்ற முஸ்லிம் இளைஞர் ஹிந்து பெண்ணை திருமணம் செய்து 8 ஆண்டுகள் குடும்பம் நடத்தி விட்டு, முத்தலாக் கூறியிருந்தார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், மதச் சுதந்திரச் சட்டம், முத்தலாக் சட்டம், வரதட்சணை கொடுமை மற்றும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல, குஜராத் மாநிலத்தில் பிகாரைச் சேர்ந்த சர்ஃப்ராஸ் கான் என்கிற அரசு அதிகாரி, தனது மனைவி ஷெனாஸ் பானுவை முத்தலாக் செய்து விட்டு, தன்னுடன் பணிபுரிந்த ஹிந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மே 5-ம் தேதி ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்திலும் முத்தலாக் விவாகரத்து நடந்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் பலுமத் பகுதியைச் சேர்ந்தவர் இஷ்தியாக் ஆலம். இவர், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஆயிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண்ணை கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால், ஆயிஷாவை அவரது கணவரும், மாமனார் உள்ளிட்ட குடும்பத்தினரும் அடித்து உதைத்து சித்ரவதை செய்திருக்கிறார்கள். இதனால், மனமுடைந்த ஆயிஷா கடந்தாண்டு அக்டோபர் மாதம் சத்தீஸ்கரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். அங்கு கணவர் வீட்டில் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி தனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறியிருக்கிறார். எனினும், ஆயிஷாவின் குடும்பத்தினர் தங்களது மகளை சமாதானப்படுத்தியதோடு, ஆலம் குடும்பத்தினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும், சமாதானமடையாத ஆலம், கடந்தாண்டு அக்டோபர் 19-ம் தேதி ஆயிஷாவை செல்போனில் தொடர்புகொண்டு, “நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், தலாக், தலாக், தலாக்” என்று 3 முறை தலாக் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆயிஷா, தனது சகோதரருடன் பலுமத்திலுள்ள ஆலம் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அப்போதுதான், ஆலம் ஏற்கெனவே வேறொரு பெண்ணை திருமணம் செய்திருக்கும் விவரம் ஆயிஷாவுக்கும், அவரது சகோதரருக்கும் தெரியவந்தது. இதனால், இருவரும் ஏமாற்றத்துடன் சத்தீஸ்கர் திரும்பினர். பின்னர், பாதிக்கப்பட்ட ஆயிஷா தனது கணவர் ஆலத்திற்கு எதிராக சட்டப்பூர்வமாக போராட முடிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக, மே 17-ம் தேதி அதிகாரப்பூர்வமாக போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, ஆலம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.