ஒரு சிறு கற்பனை: மிகப்பெரிய வியர்வை, குருதி செலவிற்குப் பின் படைக்கப்பட்ட, பல கலைஞர்கள், நடிகர் நடிகையர் நடித்த ஒரு திரைப்படம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். சில திரை விமர்சகர்கள், ஏதோ சில காரணங்களுக்காக, தங்கள் விமர்சனத்தின் வாயிலாக இந்தத் திரைப்படத்தின் மொத்த திரைக்கதையும் மாற்றி, ஏதோ சிலர் மட்டுமே, பலவேடம் அணிந்து படைக்கப்பட்ட காவியம் என்று புகழ்ந்து எழுத, திரைப்படத்தின் மூலப்பிரதி தொலைந்துவிடுகிறது. அதனால் விமர்சகர்கள் தவிர வேறுயாரும் மூலத்தை பார்க்கும் வாய்ப்பை இழந்துவிடுகிறார்கள். இந்த சமயத்தில், விமர்சகர்கள் சமைத்த கதையை வைத்து குறுகிய நோக்கம்கொண்ட சிலரால் திரைப்படம் மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது. சில வருடங்களில், மக்கள் அசல் கதையையும் கலைஞர்களை மறந்து விமர்சகர்கள் சமைத்த காவியமே மெய் என்று நம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள்.
பாரதத்தின் சுதந்திர போராட்டத்திற்கும் மேற்க்கூறிய கற்பனைக்கதைக்கும் ஒருசில ஒற்றுமைகள் உண்டு. இப்படி திருத்தி எழுதப்பட்ட திரைக்கதையால் மறைக்கப்பட்ட ஒரு மாணிக்கம் தான், செங்கோட்டை சாவடி அருணாச்சலம் பிள்ளை. திருநெல்வேலி சதி வழக்கு என்றறியப்பட்ட கலெக்டர் ஆஷ் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட ஒரு முக்கிய நபர், சாவடி அருணாச்சலம் பிள்ளை அவர்கள். இவரைப்பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, இவர் வீர வாஞ்சிநாதனின் உற்ற தோழர். ஒரு சிலரின் கூற்றுப்படி வாஞ்சிநாதன், ஆஷ் துரையை சுட்டுக்கொல்லச் சென்றபொழுது, அவர் குறி தப்பினால் ஆஷ்ஷை முடிக்கவேண்டிய பொறுப்பு கொடுக்கப்பட்ட நபர், சாவடி அருணாச்சலம் பிள்ளை. வாஞ்சி ஆஷ் துரையை சுட்டவுடன் இவர் மணியாச்சியின் ரயில்வே தண்டவாளங்களை தாண்டி தப்பி ஓடியதாக கூறுவர் சிலர்1.
திருநெல்வேலி சதி வழக்கில் பதினொன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, 237 நாட்கள் கொடிய சிறைவாசம் அனுபவித்து பின்னர் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார், சாவடி அருணாச்சலம் பிள்ளை. இவர் 1893-ஆம் வருடம் செங்கோட்டையில் சாவடி சுப்ரமணிய பிள்ளை – ஸ்வர்ணம்மாள் தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார். செல்வச்செழிப்பான வீட்டில் பிறந்து, செங்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்த இவர், ஆஷ் கொலைக்கு சிறிதுகாலம் முன்னர் கல்கத்தாவில் ஒரு மருத்துவக்கல்லூரியில் இடம்கிடைத்து, கல்லூரித் திறப்பிற்காக காத்திருந்தார்.
நீலகண்ட பிரம்மச்சாரி அமைத்த பாரத மாத சங்கத்தில், அருணாச்சலம் பிள்ளைதான் காரியதரிசி (செயலாளர்). பிள்ளை அவர்களும் மற்றோரும் சேர்ந்து செய்த பல பெரிய காரியங்களில் ஒன்று செங்கோட்டை தென்காசிப் பகுதியில் உள்ள அனைவரிடத்திலும் பாரதமாதா மீதான பக்தியை எடுத்துச் சென்றது. இதற்காக இவர்கள் பல யுக்திகளைக் கையாண்டனர். அதில் ஒன்று கஸ்பா அழகப்ப பிள்ளை வீட்டுத் திண்ணை புத்தகாலயம். சுதேசி வாசக சாலை என்று பெயரிடப்பட்ட இந்த நூலகத்திற்காக, இருந்த கொஞ்சம் நஞ்சம் நிதியும் மேசை நாற்காலி, புத்தக அலமாரி, சில புத்தகங்கள் என்று செலவாகிவிட, நூலகத்தை எப்படி நடத்துவது? அப்பொழுது வந்த மிகப்பெரிய யோசனை, பிடி அரிசி திட்டம். நூலகத்தின் ஒரு மூலையில் பெரிய பானை ஒன்று வைக்கப்பட்டது. விருப்பப்பட்டால், ஒவ்வொருவரும் நூலகத்திற்கு அவர்கள் பங்களிப்பாக ஒரு பிடி அரிசியை அந்தப்பானையில் போடலாம் என்று அறிவிக்கப்பட்டது. மாதம் ஒரு முறை இவ்வாறு கிடைக்கப்பெற்ற அரிசியை ஊர்மக்களுக்கு விற்று, அதில் வரும் பணத்தில் புத்தகங்களும், மற்ற இதழ்களும் வாங்குவதற்கான வழிமுறை செய்யப்பட்டது.
பாரத மாதா சங்கத்தின் ரகசிய கூட்டங்கள், செங்கோட்டை, தென்காசி, ஓட்டப்பிடாரம், தூத்துக்குடி என்று பல ஊர்களில் நடந்தது. இவ்வாறு நடந்த பல கூட்டங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் கூட்டங்களில் ஒன்று சித்திரை கூட்டம் என்று அறியப்படும் ஒன்று. சித்திரை முதல் நாளான, ஏப்ரல் 14, 1911 அன்று செங்கோட்டையில் நடந்த இக்கூட்டம் சாவடி அருணாச்சலம் பிள்ளை அவர்களின் வீட்டில் நடைபெற்றது. பதினைந்து பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் தான் கலெக்டர் ஆஷை சுட்டுக்கொள்வதாக தீர்மானம் செய்யப்பட்டது. கலந்துகொண்ட பதினைந்து பேரும் தானே ஆஷை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்க, பதினைந்து பெயரையும் சீட்டில் எழுதி பாரத மாதா படத்தின் முன் குலுக்கல் முறையில் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. குலுக்கலில் தேர்வு செய்யப்பட அதிஷ்டசாலி பாரத புத்திரனே வீர வாஞ்சிநாதன். பின்னர் ஜூன்17, 1911 அன்று மணியாச்சி ரயில் நிலையத்தில் என்ன நடந்தது என்று நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
மணியாச்சி சம்பவத்திற்குப் பின் பாரத மாதா சங்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள், அவர்கள் வீடுகள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. சாவடி அருணாச்சலம் பிள்ளை அவர்கள் தலைமறைவானதாகக் கருதப்பட்டது. அதனால் அவர் வீடு ஜூன் 18, 1911 அன்று சோதனையிடப்பட்டது. சோதனையின்பொழுது ஒரு சில புத்தகங்களும், தஸ்தாவேஜுகளும் கைப்பற்றப்பட்டது. அதில் திலகரது வழக்கு விசாரணை மற்றும் ஜென்ம பூமி எனும் பாரதியாரின் கவிதைத்தொகுப்பு மற்றும் கல்கத்தா மருத்துவக்கல்லூரியின் மாணவர் சேர்க்கை தகவலறிக்கை (admission prospectus) ஆகியவை முக்கியமானவையாக கருதப்பட்டன. விசாரணை முடிவில் சாவடி அருணாச்சலம் பிள்ளை கல்கத்தா சென்று அங்குள்ள மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துவிட்டதாக அறியப்பட்டது. உடன் திருநெல்வேலி போலீஸ் சூப்பேரெண்டெண்ட் P. B. தாமஸ் அவர்கள் தலைமையில் ஒரு குழு பிள்ளை அவர்களை கைது செய்ய கல்கத்தா விரைந்தது. ஜூன் 23, 1911 அன்று கல்கத்தா மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் சாவடி அருணாச்சலம் பிள்ளை அவர்கள் கைது செய்யப்பட்டு, கை மற்றும் கால் விலங்கு பூட்டப்பட்டு மிகுந்த பாதுகாப்புடன் தமிழக திருநெல்வேலி அழைத்துவரப்பட்டார்.
ஆகஸ்ட் 1, 1911 அன்று பிரிட்டிஷ் போலீஸ் தனது பூர்வாங்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. பதினான்கு பேர்களுக்கு எதிரான இந்த குற்றப்பத்திரிகையில் ஆட்சிக்கு எதிராக சதி செய்து பிரிட்டிஷ் அரசருக்கு எதிராக யுத்தம் தொடுத்ததாக” சட்டப் பிரிவு 121A-வின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கு திருநெல்வேலி சப் டிவிஷன் மாஜிஸ்திரேட் A. M. C. டாம்போ2 அவர்களின் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆகஸ்ட் 18, 1911 அன்று ஒரு துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு மேலும் சில சட்டப்பிரிவுகள்3 சேர்க்கப்பட்டு வழக்குக்கு வலுவூட்டப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 30, 1911 அன்று A. M. C. டாம்போ அவர்களால் இவ்வழக்கு மதராஸ் மாகாண உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
சாவடி அருணாச்சலம் பிள்ளை அவர்கள் தன் வாக்குமூலத்தில் அவர் பாரத மாதா சங்கத்தில் செயலாளராக முக்கிய பொறுப்பு வகித்ததாகவும், ஜூன் 12, 1911 அன்று கல்கத்தா செல்வதற்கு பயணப்பட்டு முதல் இரண்டு நாட்கள் திருநெல்வேலியிலும் பின்னர் இரண்டு நாட்கள் சென்னையிலும் கழித்துவிட்டு ஜூன் 17, 1911 அன்று சென்னையிலிருந்து கல்கத்தா பயணப்பட்டதாகவும், ஜூன் 19, 1911 அன்று கல்கத்தா மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துவிட்டதாகவும் கூறினார். பல்வேறு சாட்சிகள் மற்றும் தஸ்தாவேஜுகளின் மூலம் இது சரிபார்க்கப்பட்டது.
மதராஸ் மாகாண உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வின் கீழ் இவ்விசாரணை நடந்து பிப்ரவரி 15, 1912 அன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் சாவடி அருணாச்சலம் பிள்ளை, கஸ்பா அழகப்ப பிள்ளை, வேம்பு அய்யர், தேசிகாச்சாரி ஆகிய நான்கு பேர் குற்றமற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இதற்குள் பிள்ளை அவர்கள் 237 நாட்களை சிறையில் கழித்திருந்தார். சிறையில் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. வழக்கு செலவிற்காக இருந்த சொத்து பத்துக்கள் செலவாகி, செல்வந்தர் வீட்டு செல்லப்பிள்ளை, சாவடி அருணாச்சலம் பிள்ளை, அன்றாடம்காட்சியாய் சிறையில் இருந்து வெளிவந்தார்.
சில நாட்கள் ஓய்விற்குப்பின் மருத்துவப்படிப்பை தொடர அனுமதி மறுக்கப்பட்டு, கஷ்டஜீவனம் நடத்தியபோதும் சுதந்திர தாகம் தீரவில்லை பிள்ளை அவர்களுக்கு. மஹாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு 1919ல் அம்பாசமுத்திரம் கோமதிசங்கர தீக்ஷிதர் அவர்களுடன் இணைந்து தென்காசி – செங்கோட்டை பகுதிகளில் ஒத்துழையாமை இயக்கப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தினார். 1930 வேதாரண்யம் உப்புசத்தியாகிரகத்தில் கலந்துகொண்டது மட்டுமில்லாமல் பெருமளவில் தொண்டர் படையையும் சேர்த்து போராட்டத்திற்கு வலு சேர்த்தார். இதற்கிடையில் 1925ல் காந்திஜி கேட்டுக்கொண்டதின் பெயரில் செங்கோட்டையில் பட்டியல் சமூக மக்களுக்கான விடுதி ஒன்றை திறந்தார் பிள்ளை அவர்கள். இதனால் அவர் சமூகத்தில் சந்தித்த எதிர்ப்புகள் கொஞ்சநஞ்சம் அல்ல. ஆனாலும் அவைகளை காலில் தைத்த ஒரு சிறு முள்ளைப்போல் பிடுங்கி எறிந்து கடந்து சென்றார்.
சிறையில் 237 நாட்கள் பட்ட கொடுமைகளின் பலனும், கொடும் வறுமையும் பிள்ளை அவர்களை விடாது துரத்திக்கொண்டிருந்தது. இக்காலத்தில் மஹாகவி பாரதியாரின் தோழர்கள் சிலர் பிள்ளை அவர்களுக்கு பல உதவிகள் செய்துவந்தனர். அவைகளில் ஒன்று பிள்ளை அவர்களுக்கு திருநெல்வேலி ஹிந்து கல்லூரி தமிழ்த்துறை விரிவுரையாளராக வேலை கிடைக்கச் செய்தது. கால் நூற்றாண்டு துன்பம், ஆட்சியாளர்களின் துன்புறுத்தல், வறுமை என்று தீரா மனஅழுத்ததில் கடந்த பிள்ளை அவர்களின் வாழ்க்கைக்கு ஏப்ரல் 27, 1938 ஆண்டு முற்றுப்புள்ளி இட்டான் காலதேவன். சாவடி அருணாச்சலம் பிள்ளை அவர்கள் இறந்த பொழுது அவருக்கு வெறும் 45 வயது மட்டுமே. இன்றோடு அவர் மறைந்து 86 வருடங்கள் ஓடிவிட்டன. அந்நியர்களும் ஓடிவிட்டனர், ஆனால் அவர்கள் விட்டுச்சென்ற அந்நியமோகம், சாவடி அருணாச்சலம் பிள்ளை போன்ற பல மாணிக்கங்களை, பாரத மாதாவின் செல்லப்பிள்ளைகளை நம் கண்ணிலிருந்து மறைத்துவிட்டது. பாரத்தின் சுதந்திரப்போராட்டத்தின் வரலாற்றை திருத்தி, சாவடி அருணாச்சலம் பிள்ளை அவர்கள் போன்று மறைக்கப்பட்ட மாணிக்கங்களின் பக்கங்களை மீட்டெடுத்து மக்களுக்கு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது, ஆம் இது பாரதத்தின் அம்ருத காலத்தின் ஆரம்பம்.
ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன்றில்
- திருக்குறள், புகழ், அதிகாரம் 24, குறள் 233
Reference
1முக்கிய சாட்சிகளின் கூற்றின் அடிப்படையில் தப்பிஓடியவர் கட்டுக்குடுமி வைத்திருந்ததாகவும், மேற்சட்டை அணியாமல், பூணல் தரித்திருந்ததாகவும், கேரளா நம்பூதிரிகள் போல் உத்தரீயம் அல்லது அங்கவஸ்திரம் எனப்படும் மேர்த்துண்டை உடலின் குறுக்காக கட்டிக்கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் அது கிருஷ்ணாபுரம் சங்கரகிருஷ்ணன் என்று முடிவுக்கு வரப்பெற்றது.
2குமாரசாமி தம்பு என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஒரு இலங்கைத் தமிழர். பின்னர் ஆல்ப்ரெட் மேக்ஜார்ஜ் குமாரசாமி தம்பு ஆகி, சுருக்கி ஆங்கிலாக்கம் செய்யப்பட்டு A. M. C. டாம்போ ஆகியது. இவர் ஒரு ICS பட்டதாரி. ஆஷ் கொலையை விசாரிக்க, திருநெல்வேலியில் பிரத்யேகமாக சப் டிவிஷன் மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டவர்.
3 துணை குற்றப்பத்திரிகையில் மேலும் சில சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு முன் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கைக்கு வலுவூட்டப்பட்டது. சட்டப்பிரிவு 302 – கொலைக்குற்றம், மற்றும் 109 – குற்றம் புரியத் தூண்டுதல்/ அல்லது துணைபுரிதல் ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டன.
ரகமி, வீர வாஞ்சி, சுதந்திர தின பவழ விழா வெளியீடு, பாரதி நூலகம், தேப்பெருமாள் நல்லூர்
Dr. ரமேஷ் தங்கமணி, விடுதலை போராட்ட வீரர் செங்கோட்டை சாவடி S. அருணாச்சலம் பிள்ளை, சொல்வனம், Online (2020)
தி ஸ்டாலின் குணசேகரன், தமிழகத்தின் தியாக தீபங்கள் – 135, தினமணி (2021)
– Article by ராஜா பரத்வாஜ் !