பழங்குடியினருக்காக ரூ.17 கோடியில் ‘ஏகலைவா பள்ளி’!

பழங்குடியினருக்காக ரூ.17 கோடியில் ‘ஏகலைவா பள்ளி’!

Share it if you like it

இருளர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காக மத்திய அரசு 17 கோடி ரூபாயில் ‘ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளியை’ அமைத்திருக்கிறது. சகல வசதிகளுடன் வண்டலுார் அருகே கட்டப்பட்டுள்ள இப்பள்ளியில் மேற்கண்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து, பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக ‘ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகள்’ தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பத்துார், ஊட்டி ஆகிய மாவட்டங்களில் ‘ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகள்’ நிறுவப்பட்டு, ஆங்கில வழியில் பாடம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 2 பள்ளிகள் உள்ளன. இங்கு, பழங்குடியின மாணவர்கள் ஆர்வமாக படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 2018-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலம் பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், ஒரு கட்டடத்தில் மட்டும் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி துவக்கப்பட்டது. இந்த பள்ளியில் ஒரு தலைமையாசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறைந்த மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளில் 167 மாணவ, மாணவிகளாக உயர்ந்திருக்கிறது. மேலும், நிகழ் கல்வியாண்டில் கூடுதலாக 40 மாணவர்கள் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள்.

இதனிடையே, இப்பள்ளி கடந்த 2021 – 2022-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆகவே, இங்கு பிளஸ் 1 மாணவர்களும் பயில்கின்றனர். எனவே, இப்பள்ளிக்கு தனியாக கட்டடம் கட்ட வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, இப்பள்ளி கட்டுவதற்காக செங்கல்பட்டு மாவட்டம் வண்டலுார் தாலுகா குமிழி ஊராட்சியில் 15 ஏக்கர் நிலத்தை வருவாய்த் துறையினர் ஒதுக்கீடு செய்தனர். இதன் பிறகு, இப்பள்ளிக்கு கட்டடம், மாணவர்கள் விடுதிகள் கட்ட கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது மத்திய அரசு. இப்பணிகள் துவங்கி நடந்து வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக, கட்டுமான பணிகள் மந்தமாகின.

latest tamil news

இந்த நிலையில், தற்போது அனைத்து கட்டடங்களும் கட்டி முடிக்கப்பட்டு திறப்பதற்கு தயார் நிலையில் இருக்கிற. இங்கு நடப்பு 2022 – 2023-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்த வகையில், பழங்குடியின மாணவர்களுக்கு 90 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆண்கள் – 216 பேர், பெண்கள் 216 பேர் என மொத்தம் 432 பேர் சேரலாம். மற்ற பிரிவினர்களுக்கு 10 சதவீத இடங்கள். ஆண்கள் 24 பேர், பெண்கள் 24 பேர் என மொத்தம் 48 மாணவர்கள் சேரலாம். இப்பள்ளியில் தமிழகம் முழுதும் இருந்து மாணவர்கள் வந்து சேரலாம். இருளர் மற்றும் பழங்குடியின பிரிவில் உள்ள குழந்தைகளை சேர்ப்பதற்கு, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றம் தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோர் முயற்சித்து வருகின்றனர். இந்த சூழலில், இப்பள்ளிக்கு கூடுதல் மாணவி விடுதி மற்றும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் செய்ய மத்திய அரசு 5 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது.

இப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதி செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து மாணவர்களுக்கும் விடுதியில் இடம் உண்டு. அதேபோல, தனித்தனி கழிப்பறைகள், விளையாட்டு திடல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தங்கும் இடம், உணவு, பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடைகள், காலணிகள், டை, பெல்ட், துணி சோப்பு, குளியில் சோப்பு, தேங்காய் எண்ணெய், டூத் பேஸ்ட் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும். தவிர, நுாலகம் மற்றும் ‘ஸ்மார்ட்’ வகுப்பு மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நாட்டு நடப்புகளை தெரிந்துகொள்ள ஏதுவாக விடுதியில் ‘எல்.இ.டி. டிவி’ வசதி செய்யப்பட்டிருப்பதோடு, ‘நீட்’ உள்ளிட்ட அனைத்து திறனறித் தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சியும் அளிக்கப்படுக்கிறது என்பதுதான் சிறப்பம்பசம்.


Share it if you like it