வெளிநாடுகளுக்கு கடத்தப்படவிருந்த 1,200 ஆண்டுகள் பழமையானதும், ஆசியாவிலேயே 3-வது மிகப்பெரியதுமான பஞ்சலோக சிலையை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சென்னையில் பறிமுதல் செய்தனர்.
சென்னை மணலி அருகே சாத்தான்காடு பகுதியில் பழைய இரும்புக் கடை நடத்தி வருபவர் பார்த்திபன். இவரது குடோனில் மிகவும் பழமையான பஞ்சலோக நடராஜர் சிலையை பதுக்கி வைத்திருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் மேற்கண்ட குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 4.5 அடி உயரமுள்ள மிகப்பெரிய நடராஜர் சிலை இருப்பதை கண்டறிந்து கைப்பற்றினர். இதுகுறித்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதாவது, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், ஜெர்மனியில் வசித்து வருகிறார். இவர், கடந்த 2017-ம் ஆண்டு மேற்கண்ட நடராஜர் சிலையை ஜெர்மனிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருக்கிறார். இதற்காக, அந்த சிலை தொன்மையானது அல்ல என்று சான்றிதழ் வழங்கக் கோரி இந்திய தொல்லியல் துறையிடம் விண்ணப்பித்தார். ஆனால், இதை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறையினர், அந்தச் சிலை பழமையானதுதான். ஆகவே, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய முடியாது என்று கூறிவிட்டது. மேலும், பழமையான சிலையை வைத்திருப்பதால், இது தொடர்பாக அப்பெண் இந்திய தொல்லியல் துறையில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியது. ஆனால், அப்பெண்ணிடம் சிலை தொடர்பான முறையான ஆவணங்கள் இல்லாததால், அதை ஒரு புரோக்கரிடம் கொடுத்த பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறிவிட்டு ஜெர்மனிக்குச் சென்று விட்டது தெரியவந்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் மேற்படி நடராஜர் சிலை ஆசியாவிலேயே 3-வது மிகப்பெரிய சிலை என்பதுதான் அதிர்ச்சி. ஆசியாவிலேயே மிகப்பெரிய பஞ்சலோக நடராஜர் சிலை, நெய்வேலி நடராஜர் கோயிலில் இருக்கிறது. இது சுமார் 12 அடி (3.7 மீ) உயரமும், 1.25 டன் எடையும் கொண்டது. இரண்டாவது உயரமான நடராஜர் சிலை மயிலாடுதுறை மாவட்டம் கோனேரிராஜபுரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் உள்ளது. இது 9 அடி உயரம் கொண்டது. மூன்றாவதாவது பெரிய சிலையாக கடந்த 2018-ம் ஆண்டு அதிராம்பட்டினத்தில் நிலத்தை தோண்டும்போது கிடைத்த 4.5 அடி உயரமுள்ள நடராஜர் சிலை கருதப்பட்டது. ஆனால், தற்போது கைப்பற்றப்பட்டிருக்கும் நடராஜர் சிலையும் 4.5 அடி உயரம் இருப்பதால், இதுவும் ஆசியாவில் 3-வது பெரிய சிலையாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மேலும், இது ஆரம்பகால சோழர் அல்லது பல்லவர் அல்லது சோழர்களின் மாறுதல் காலமான, 1,200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும், இந்த சிலையின் சரியான தொன்மைத் தன்மையை அறிவதற்கு இந்திய தொல்லியல் துறை டெல்லி மற்றும் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மூலம் கண்டுபிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தவிர, இந்த சிலையை திருடும்போது முழுமையாக நேர்த்தியாக எடுக்க முடியாததால், அடிப்பாகத்தை துண்டித்து திருடி இருப்பதாகவும், பின்னர் புதிதாக அடிப்பாகத்தை செய்து இணைத்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.