சென்னையில் ஒரு இளம்பெண் மற்றும் 2 சிறுமிகளை ஆசைவார்த்தை கூறி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 சிறுவர்கள் உட்பட 11 பேரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகள் உண்டு. இவரது உறவினர்களான தாம்பரத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும், 17 வயது தோழியும் இவர்களது வீட்டிற்கு வந்து தங்கி இருந்தனர். அப்போது, 3 பேரும் சேர்ந்து அடிக்கடி வெளியில் சென்று வந்திருக்கிறார்கள். வழக்கம்போல, கடந்த 30-ம் தேதியும் 3 பேரும் வெளியில் சென்று ஆண் நண்பர்களை சந்தித்து விட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், இரவு 10 மணிக்குள் 2 சிறுமிகளும் வீட்டிற்கு வந்து விட்ட நிலையில், 18 வயது இளம்பெண் மட்டும் நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்திருக்கிறார்.
இதைக் கண்ட அவரது சித்தப்பா அப்பெண்ணை கண்டித்திருக்கிறார். அதற்கு அப்பெண், தன்னை 5 பேர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த அவரது சித்தப்பா, புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து விசாரணை நடத்தியதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அப்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததற்கான அடையாளங்கள் இல்லை என்றும், அதேசமயம், அவரது சம்மதத்தின் பேரில் அவர் பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் உட்பட 3 பேரையும் அழைத்துச் சென்ற போலீஸார் பாலியல் வன்புணர்வு செய்த ஆண் நண்பர்களை கண்டறிந்தனர். அந்த வகையில், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தனுஷ், சஞ்சய், பாஸ்கர், முத்துராமன் உட்பட 15 முதல் 18 வயதுடைய சிறுவவர்கள் என 11 பேரை கைது செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து 4 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்ததோடு, இவ்வழக்கில் தலைமறைவான கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. நேற்று சங்கரன்கோவிலில் நடந்து சென்ற ஆசிரியையிடம் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது 2 சிறுமிகள் உட்பட 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இப்படி சந்தி சிரித்துக் கொண்டிருக்க, முதல்வர் ஸ்டாலினோ சட்டம் ஒழுங்கி சிறப்பாக இருப்பதாக கூறிவருவது வேடிக்கையாக இருக்கிறது என்று எதிர்க்கட்சியினரும், நெட்டிசன்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.