அரசு அதிகாரி மீது தாக்குதல்: தி.மு.க. நிர்வாகிகள் அராஜகம்!

அரசு அதிகாரி மீது தாக்குதல்: தி.மு.க. நிர்வாகிகள் அராஜகம்!

Share it if you like it

திருப்பூர் அருகே தி.மு.க. நிர்வாகியும், அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து பணியில் இருந்த அரசு அதிகாரியை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலம் உள்ளது. இங்கு, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலராக முத்துராமலட்சுமி பணிபுரிந்து வருகிறார். இவர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவார்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர், இவரது கணவர் விக்னேஷ் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆகவே, முத்துராமலட்சுமி, தனது மாமனார் முத்து மற்றும் மகன், மகளுடன் வெள்ளக்கோவிலிலேயே தங்கியிருந்து, பணிபுரிந்து வருகிறார்.

இந்த சூழலில், குழந்தைகள் குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களைக் கணக்கிட்டு அருகிலுள்ள மையத்துடன் இணைக்கும்படி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி, குழந்தைகள் குறைவாக இருந்த புள்ளசெல்லிபாளையம் அங்கன்வாடி மையத்தை அருகிலுள்ள மற்றொரு மையத்துடன் இணைக்க முத்துராமலட்சுமி பரிந்துரை செய்திருக்கிறார். இதற்கு அப்பகுதி தி.மு.க.வினர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, இதுகுறித்து பேசுவதற்காக, முத்துராமலட்சுமியை நகராட்சி அலுவலகத்துக்கு வந்து தன்னை பார்க்குமாறு, திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரும், வெள்ளக்கோவில் நகர் மன்றத் தலைவர் கனியரசியின் கணவருமான ராசி கே.ஆர்.முத்துக்குமார் கூறியிருக்கிறார்.

ஆனால், முத்துராமலட்சுமி செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் தனது ஆதரவாளர்களான தி.மு.க. நகர துணைச் செயலாளர் அருள்மணி, புள்ளசெல்லிபாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் சுப்பிரமணி, கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்த புகழேந்தி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோருடன் வெள்ளக்கோவில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். அங்கு பணியிலிருந்த முத்துராமலட்சுமியை, அனைவரும் சேர்ந்து தாக்கி இருக்கிறார்கள். மேலும், இதை தடுக்க முயன்ற முத்துராமலட்சுமியின் மாமனார் முத்துவுக்கும் சரமாரியாக அடி உதை விழுந்தது.

இதில் காயமடைந்த இருவரும் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் மீது வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, தி.மு.க.வைச் சேர்ந்த சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் முத்துராமலட்சுமி மற்றும் அவருடைய மாமனார் முத்து மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். தி.மு.க. நிர்வாகிகளின் இந்த அராஜகம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it