சினிமா தயாரிப்பாளர்களை குறிவைத்து வருமான வரித்துறை ரெய்டு நடந்து வருவது தமிழ்த் திரையுலகினர் மத்தியில் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க ஃபைனான்ஸியராக அறியப்படுபவர் மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன். அதேசமயம், கோபுரம் சினிமாஸ் என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் வைத்து தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அதேபோல, தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களாக அறியப்படுபவர்கள் கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோர். இந்த சூழலில், மேற்கண்ட 4 பேரையும் குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரிலுள்ள வீடு, தியாகராய நகரிலுள்ள கோபுரம் ஃபிலிம்ஸ் அலுவலகம் என 10 இடங்களிலும், மதுரை மேலமாசி வீதியிலுள்ள அவருக்குச் சொந்தமான அலுவலகம், காமராஜர் சாலை, கீறைத்துறை பகுதியிலுள்ள வீடு, செல்லூர் பகுதியிலுள்ள கோபுரம் திரையரங்கம் உள்ளிட்ட 30 இடங்களிலும் என மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அதேபோல, சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுக்குச் சொந்தமான சென்னை தியாகராய நகர் பிரகாசம் சாலையிலுள்ள அலுவலகம் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ம மேலும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்னும் பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்குச் சொந்தமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
மேலும், ஸ்டுடியோ கிரீன் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் ஞானவேல் ராஜாவுக்குச் சொந்தமான சென்னை தியாகராய நகர் தணிகாசலம் சாலையிலுள்ள இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த சோதனையிலும் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த லிஸ்டில் மேலும் சில தயாரிப்பாளர்கள் பெயரும் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆகவே, தமிழ்த் திரையுலகினர் கலக்கத்தில் இருக்கிறார்கள்.