சென்னையில் தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர், துப்புரவுப் பணியாளர் ஒருவரை வெறும் கையால் மலம் அள்ள வைத்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது குற்றமாகக் கருதப்படுகிறது. ஆகவே, இயந்திரங்களை கொண்டு மனிதக் கழிவுகளை அகற்றும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சென்னையில் ஆளும் கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர், துப்புரவுப் பணியாளர் ஒருவரை வெறும் கையால் மலம் அள்ள வைத்த கொடூரம் அரங்கேறி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த எபினேசர். இவர், நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தண்டையார் நகர் பகுதியில் குறைகளை கேட்டபோது, ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் நீண்ட நாட்களாகவே சாக்கடை அடைத்துக் கொண்டிருப்பதாகவும், இதனால், அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக இருப்பதாகவும், இதன் காரணமாக தங்களால் அடி பைப்பில் தண்ணீர் அடிக்கச் செல்ல முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று எபினேசர் பார்வையிட்டார். அப்போது, அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாகக் கிடந்தது. இதனால், ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. எபினேசர், மாநகராட்சி அதிகாரிகளை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார். உடனடியாக அந்த இடத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே, எங்கிருந்தோ மாநகராட்சி ஊழியர் ஒருவரை அழைத்து வந்த அதிகாரிகள், மேற்படி சாக்கடையை சுத்தம் செய்யும்படி கூறினர். ஆனால், அந்த ஊழியரிடம் கையுறை உள்ளிட்ட எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை.
எனினும், எம்.எல்.ஏ.வின் வலியுறுத்தலால் அந்த ஊழியர் வெறும் கையால் சாக்கடையில் இருந்த மலத்தை அள்ளி சுத்தப்படுத்தினார். ஆனால், எம்.எல்.ஏ. எபினேசரோ எந்த சலனமும் இல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் அனைத்தையும் யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர். இதையடுத்து, இந்த வீடியோ வைரலானது. இதைப் பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சியடைந்து, தி.மு.க. எம்.எல்.ஏ.வின் அராஜக செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.